அமைச்சர்கள் மீதான வழக்குகள்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!

அரசியல்

திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் அமைச்சர் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி ஆகியோரை கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (அக்டோபர் 29) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக ஒரே போல அவசரகதியில் முடித்து வைக்கப்படுகின்றன. மேல்முறையீடும் செய்யப்படுவதில்லை.

இது அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாக உள்ளது. தமிழக அரசு விசாரணை அமைப்புக்களின் இந்தப் போக்கு பொதுமக்களிடையே பலத்த நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இந்த விசாரணையைத் தடுக்கும் பொருட்டு, அவர் இந்த வழக்குகளை விசாரிக்கக் கூடாது என்றும் கோரி, திமுக தரப்பு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுகவினர், நீதியரசரை அவதூறாகப் பேசுவது உட்பட தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி, தனக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள இந்த வழக்கு விசாரணையை ரத்து செய்யக்கோரியும், இடைக்காலத் தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியை தொடர்ந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் . தங்கம் தென்னரசு ஆகியோரும் உச்சநீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, இந்த வழக்குகளில் தமிழக பாஜகவின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்துள்ளோம்.

அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது.

திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கேரள குண்டுவெடிப்பு : யார் காரணம்?

சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.. ஆனால் இந்தியா வெற்றி பெறுமா?

TN BJP Caveat Petition in Supreme Court

+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *