சட்டமன்ற இருக்கை தொடர்பாகச் சபாநாயகர் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாளை (அக்டோபர் 17) சட்டமன்றம் கூடுகிறது. தற்போது அதிமுக இரண்டு பிரிவுகளாக இருப்பதால் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சட்டப்பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா, அல்லது அதே இருக்கை கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவில் நிலவி வருகிறது.
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரைத் தேர்வு செய்ய இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியும், இந்த விவகாரத்தில் தன்னை கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என்று பன்னீர் செல்வமும் மாறி மாறி சபாநாயகர் அப்பாவுக்குக் கடிதம் எழுதினர்.
பன்னீர் செல்வம் இருக்கை மாற்றப்படாவிட்டால் சட்டமன்றத்தைப் புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இந்தச்சூழலில் இன்று (அக்டோபர் 16) மாலை சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் மதுரையில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வத்திடம் இருக்கை விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பன்னீர் செல்வம், “சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் பேரவைத் தலைவரின் முடிவுதான் இறுதியானது. அதற்கு கட்டுப்படுவோம்.
அடிப்படை உறுப்பினர்களின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் எம்.ஜி.ஆரின் நோக்கம். அந்த உரிமை பறிபோகவிடாமல் தடுப்பதுதான் எங்கள் நோக்கம்.
இப்போது இருக்கிறவர்கள் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்குகிறார்கள். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம்” என்று கூறினார்.
பிரியா
பாஜகவுடன் சமரசமா?: சிரித்துக்கொண்டே பதிலளித்த மு.க.ஸ்டாலின்
76 மத்திய அமைச்சர்களை அனுப்பும் பிரதமர்: அண்ணாமலை தகவல்!