சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இக்கூட்டத்தில், புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலையம், ஸ்மார்ட் சிட்டி ஊழல், ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு,
அதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருகிறது.
இதற்கு பரந்தூரைச் சுற்றியுள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக அம்மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில் இங்கு, மோசடிப் பத்திரப்பதிவு மூலமாக அரசுக்கு ரூ.165 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்த கூட்டுச்சதி நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருப்பதுடன், இதுதொடர்பான ஆவணங்களையும் அளித்திருக்கிறது.
அதுபோல், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற ஊழல் தொடர்பான ஒரு நபர் விசாரணைக் குழு அறிக்கையும் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பான அறிக்கையை அதன் விசாரணைக் குழு தலைவர் டேவிதார், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
அடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலநீட்டிப்பு நாளையுடன் (ஆகஸ்ட் 24) முடிவடையும் நிலையில், அதன் விசாரணை அறிக்கையும் முதல்வர் ஸ்டாலினிடம் ஆகஸ்ட் 27ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
5 ஆண்டுகளில் 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, 158 பேரிடம் மேற்கொண்டிருக்கும் அந்த விசாரணை அறிக்கை, 500 பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. ஆக, இவையனைத்தும் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஜெ.பிரகாஷ்
பரந்தூர் விமான நிலையம் தமிழக வளர்ச்சியின் படிக்கட்டு: முதல்வர் ஸ்டாலின்