மேகாலயா வெற்றியும் மம்தாவின் டெல்லி மிஷனும் !

அரசியல் இந்தியா

2024   மக்களவைத் தேர்தலில்  பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இப்போதே முயற்சிகளை எடுத்து வருகின்றன.

2022 இறுதியிலேயே  காங்கிரஸ், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் 2024ஆம் ஆண்டுக்கான வேலைகளை தொடங்கியது. 

அதே சமயம் பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜகவை 100 சீட்டுக்குள் வீழ்த்த வேண்டும் என்றும், இதற்காக எதிர்க்கட்சிகள்  ஒன்றிணைய வேண்டும், விரைவில் காங்கிரஸ் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். 

தமிழக முதல்வர் ஸ்டாலினும் தான்  ஏற்கனவே தேசிய அரசியலில் இருப்பதாகவும்,  பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள்  ஒன்று சேர வேண்டும் என்றும்  கூறியுள்ளார். 

ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2024 தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். 

மேகாலயாவில் திரிணமூல்!

2018ஆம் ஆண்டில் முதன்முறையாக மேகாலயாவில் திரிணமூல் கட்சி சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 8 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் யாரும் வெற்றி பெறவில்லை.

இந்தசூழலில் 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.

மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில்  59 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி)  26 இடங்களை  பிடித்தது. பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்றது. 

அதேசமயம் 2018ல் தோல்வியடைந்த திரிணமூல் காங்கிரஸ் தற்போது 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த தேர்தலில் குறைந்தது 12 இடங்களில்  திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி  நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 10 இடங்களில் முன்னிலையில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் இறுதியில் 5 இடங்களை கைப்பற்றியது. 

மேகாலயா தேர்தல் வெற்றி குறித்து மம்தா பானர்ஜி, “6 மாதங்களுக்கு முன்புதான் இம்மாநிலத்தில் பணியை தொடங்கினோம். தற்போது 15 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளோம். இந்த வெற்றி தனது கட்சியின் தேசிய அந்தஸ்துக்கு உதவும்.  நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அடுத்தமுறை இன்னும் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறியுள்ளார் . 

மேகாலயாவில் 5 இடங்களை பிடித்திருந்தாலும் திரிபுரா மாநிலத்தில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

தேர்தல் ஆணைய தகவல்படி திரிபுராவில் மம்தா பானர்ஜியின் கட்சி ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே வாக்குகளை பெற்றுள்ளது. 

முன்னதாக 2022ல் கோவா சட்டமன்ற தேர்தலில் 26 தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ்  ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரியா

சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா கோலாகலம்!

tmc meghalaya Mamata Mission
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0