பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து தமிழ் மாநில காங்கிரஸ் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (பிப்ரவரி 26) தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
“எந்த ஒரு கட்சியும் கூட்டணி குறித்து முடிவெடுப்பது அவர்களின் விருப்பம். அதனால் அவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவெடுத்திருக்கிறார்கள். எங்களுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாக கூற முடியாது.
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. கூட்டணிக்குள் நிறைய மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கிறது. நல்ல ஒரு கூட்டணி எங்களது தலைமையில் நிச்சயமாக அமையும்” என்று தெரிவித்தார்.
தனிப்பட்ட தனது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பாஜகவுடன் சேரும் முடிவை வாசன் எடுத்துள்ளது துரதிர்ஷ்டம் என்று அதிமுக ஆதரவாளர் பொங்கலூர் மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக வேண்டும் என்பதும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் பாஜக மூலம் ஏதாவது ஒரு பதவிக்கு வர வேண்டும் என்பது தான் அவரது நோக்கமாக உள்ளது.
வரும் காலத்தில் அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கலாம் அப்படி ஏற்பட்டால் தனக்கு தர்ம சங்கடம் ஏற்படும் என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவை வாசன் எடுத்துள்ளார்.
தமாகா முற்றிலும் செல்வாக்கை இழந்து விட்ட நிலையில் கூட, ராஜ்ய சபை உறுப்பினர் வாய்ப்பை கொடுத்து பெருமதிப்புடன் கெளரவம் செய்த அதிமுகவுக்கு பெரும் துரோகம் செய்து விட்டார்.
காங்கிரஸிலிருந்து தான் வெளியேறி பெரிய சக்தியாக வருவோம் என்ற கனவு தகர்ந்து தனித்து நிற்கும் நிலையில், முற்றிலும் தனது தனிப்பட்ட மரியாதையையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமாகாவில் 90% நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவை மீறி தனிப்பட்ட தனது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு பாஜகவுடன் சேரும் முடிவை எடுத்துள்ளது துரதிர்ஷ்டமே. அதற்குரிய பலனை வாசன் பெறுவார்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மார்ச் 3-க்கு பிறகு தொகுதி பங்கீடு கையெழுத்து: இந்திய கம்யூனிஸ்ட் நம்பிக்கை!