தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இன்று (ஜூன் 11) நடைபெற உள்ள பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
இன்று காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பாஜக தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசும்போது, “பிரதமர் ஆகும் வாய்ப்பை தமிழகம் இரண்டு முறை தவறவிட்டுள்ளது. அதற்கு காரணம் திமுக தான். நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அமித்ஷாவின் கருத்து குறித்து திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தமிழக மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிரான கட்சியாக பாஜகவை பார்க்கிறார்கள். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட பாஜக முனைப்பு காட்டவில்லை. அமித்ஷா தமிழை பற்றி தமிழகத்தில் பேசுவார். வட நாட்டிற்கு சென்று ஒரே மொழி இந்தி என்று பேசுவார். மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அமித்ஷா பேசிவருகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
அமித் ஷா வரும்போது மின்வெட்டு: செல்லூர் ராஜூ விமர்சனம்!
ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள திரைப்படம்: இயக்குநரை கெளரவித்த மீனவர்கள்