தமிழகத்தில் படிக்கும் மாணவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி செய்கிறார் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று (மே 29) குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு மாநில பல்கலைக்கழக மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் ரவி தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ரவி, “நான் ஆளுநராக பொறுப்பேற்றபோது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக இயங்கி வந்தன. இதனை சரிசெய்து ஒன்றிணைக்கவே ஆளுநர் மாநாட்டை தொடர்ந்து நடத்தி வருகிறேன்.
பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம் நமது பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. திராவிட இயக்க கதைகளால் பாடத்திட்டம் நிரம்பியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், “ஆளுநர் ரவி தன்னுடைய அறியாமையை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். தமிழ்நாடு என்ற ஒரு பகுதி இருப்பதே ஆளுநரான பிறகு தான் அவருக்கு தெரியும்.
தமிழகம் உயர்கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்த மாநிலமாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த இடத்தில் ஆர்.என்.ரவி பிறந்த பிகார் மாநிலம் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் கல்வி முறையை ஒழித்துவிட்டு, உத்தரபிரதேச, பிகார் மாநில கல்வி முறையை இங்கே கொண்டு வர அவர் நினைக்கிறார். அதன்மூலம் இங்கு படிக்கும் மாணவர்களை மனுதர்ம மாணவர்களாக மாற்றுவதற்கான எண்ணத்தில் அவர் செயல்படுகிறார்.
பொய்யை தவிர அவர் எதுவும் சொல்வதில்லை. ஆர்.என்.ரவி கல்வியாளர் அல்ல. ஒரு பல்கலைக்கழகத்தின் தலைவராக இருப்பதற்கு ஒரு கல்வியாளரை நியமித்தால் தான் சரியாக இருக்கும். ஆளுநரை அந்தப் பதவியில் அமர்த்துவது சரியாக இருக்காது.
அனைத்து துணைவேந்தர்களையும் வெயில் காலத்தில் ஊட்டியில் ஓய்வெடுப்பதற்காக ஆளுநர் ரவி அழைத்து சென்றுள்ளார்” என்று தெரிவித்தார் டி.கே.எஸ்.இளங்கோவன்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
All Eyes On Rafah: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட பிரபலங்கள்!
கோவை: மருத்துவமனையில் திருட முயன்றதாக இளைஞர் அடித்துக் கொலை… 15 பேர் கைது!