தமிழகத்தில் திராவிட மாடல் கொள்கை இன்னும் காலாவதியாகவில்லை என்று திமுக செய்தி தொடர்பு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திராவிட மாடல் என்ற காலாவதியான கொள்கையை புதுப்பிக்கும் முயற்சி என்பது ஒரே பாரதம் ஒரே இந்தியா கருத்துக்கு எதிரானது” என்று தெரிவித்திருந்தார்.
ஆளுநரின் கருத்துக்கு பதிலளித்துள்ள திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன்,
“திராவிட மாடல் என்பது சமத்துவ கொள்கை. மக்கள் அனைவரும் சமம் என்பது தான் அந்த கொள்கையின் நோக்கம். திராவிட மாடல் கொள்கையை பின்பற்றி வட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தை இந்தியாவில் முதலில் முன்னெடுத்தது தமிழ்நாடு தான். அதனால் தமிழர்களின் போராட்டம் மற்றவர்களின் போராட்டத்துடன் எந்தவகையிலும் குறைந்தது இல்லை. இதுகுறித்து ஆளுநர் பேச அவருக்கு அருகதையில்லை.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் தன்னுடைய கடமையில் இருந்து விலகியுள்ளார். தமிழக அரசு தன்னுடைய கடமையில் இருந்து விலகவில்லை.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள் தான் 90 சதவிகிதம் ஈடுபடுகிறார்கள்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!
“எந்த மசோதாக்களும் நிலுவையில் இல்லை”: ஆளுநர் ரவி