“மத்திய அரசு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்”: விசிக மாநாட்டில் டி.கே.எஸ்.இளங்கோவன்

விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பேசும்போது, “மாநாட்டின் நோக்கம் என்பது மிகவும் உயர்ந்த நோக்கம். இந்த நோக்கத்திற்கு துணை நிற்பது திமுகவின் கடமை. குடி, போதைப்பொருள் பயன்பாடு என்பது மனிதர்களை மனிதர்களாக மதிப்பதை கெடுக்கிறது. சுயமரியாதை உள்ள எவரும் மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிர, மற்றவர்களிடம் மதிப்பை இழந்துவிட வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

ஆனால், அந்த மதிப்பை குறைப்பது போதைப்பொருள் பயன்பாடு. தமிழகத்தில் 70-கள் வரை மதுவிலக்கு இருந்தது. ஆனால், குடிப்பழக்கம் மக்களிடையே இருந்தது. அதுதான் பிரச்சனை. அண்டை மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடா, கேரளா போன்ற மாநிலங்களில் மதுவிற்பனை செய்யப்பட்டது. இங்கே முடியாதவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று மது வாங்கி குடித்தனர்.

இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் மாநாட்டின் வெற்றியாக அமையும். போதைப்பொருளை ஒழிப்பது என்பது தனிமனித ஒழுக்கம். சுயமரியாதை உள்ள ஒவ்வொருவரும் அதனை புரிந்துகொள்ள வேண்டும்.

போதைக்கு எதிரான பிரச்சாரத்தை செய்வதற்கு இப்பொழுது ரூ.4 கோடி ஒதுக்குகிறார்கள். அதை ரூ.200 கோடியாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். அகில இந்திய அளவில்  மதுவிலக்கு கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதுவிலக்கு விசாரணை ஆணையம், போதைப்பொருள் மறுவாழ்வு மையம்… விசிக மாநாட்டில் தீர்மானம்!

மோடி சொன்ன பொய்கள்… லிஸ்ட் போட்ட கார்கே

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts