அமைச்சர் பொன்முடி மீது குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த இருவர் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் சேற்றை வாரி வீசியிருக்கிறார்கள் என அமைச்சர் சேகர்பாபு இன்று (டிசம்பர் 3) தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கன மழையால் கடும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
முன்னறிவிப்பால் தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது!
அப்போது அவர், “பெஞ்சல் புயலால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும் மழை பாதிப்பில் இருந்து, இயந்திரமாக முதலமைச்சர் தமிழகத்தை காக்கும் கடவுளாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
எதிர் கட்சி தலைவர் கள ஆய்வு கூட்டங்களைகூட கூட்ட முடியாமல் திணறி வருகிறார். சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டுமே அவர் கட்சி நடத்தி வருகிறார்.
சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால் தான், பெரிய சேதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை அவர் திரும்பி பார்க்க வேண்டும், 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்ததால், 280க்கு மேற்பட்ட உயிர்கள் பலியானதையும், பல லட்சம் வீடுகள் இழந்ததையும் மறந்திருக்க முடியாது.
சாத்தனூர் அணையை பொறுத்தவரை முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 25ம் தேதியில் இருந்து படிப்படியாக நிரம்பும் நீர் முன்னறிவிப்பு வெளியிட்டு வெளியேற்றப்பட்டது.
முதற்கட்டமாக கடந்த 25ம் தேதி 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதுபோல், முன்னறிவிப்பு கொடுத்து ஐந்து முறை சாத்தனூர் அணையில் இருந்து படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று இறுதியாக முன்னறிவிப்பு வெளியிட்டு 1,68,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அப்படி முன்னறிவிப்போடு வெளியேற்றப்பட்டதால் தான் எந்தவிதமான உயிர் சேதமும் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பெருமழை வெள்ளத்தின் போது ஆளும் கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்கள். வாய்ச்சவடால் விடும் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.
நிவாரண பணிகளை முடக்க நினைக்கிறார்கள்!
விழுப்புரம் மாவட்டத்தில் இருவேல்பட்டு மற்றும் அரசூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நிவாரண உதவி வழங்க அமைச்சர் பொன்முடி இன்று சென்றிருந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த விஜயராணியும், அவரது உறவினர் ராமரும் வேண்டுமென்றே அரசியல் உள்நோக்கத்துடன் சேற்றை வாரி வீசியிருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் மக்களுக்காக அரசு செய்து நிவாரண பணிகளை முடக்க நினைக்கிறார்கள்.
கிரிவலப்பாதையில் சேதம் 2 நாட்களில் சரிசெய்யப்படும்!
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரிசெய்யப்படும். மகா தீபம் ஏற்பாடுகள் குறித்து டிச 6,7-ல் மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளோம். திருவண்ணாமலைக்கு வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் எந்தவித குறைபாடு இன்றி செய்து தரப்படும்.
நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வருங்காலத்தில் இதுதொடர்பாக உறுதியானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு 40 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம்” என சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சாத்தனூர் அணை விவகாரம் : திமுக அரசுக்கு அன்புமணி வைத்த 7 முக்கிய கேள்விகள்!
திருவண்ணாமலை : ‘மக்கள் வாழ்வதற்கு தகுதியான இடம் இல்லை’ – ஐஐடி பேராசிரியர் குழு!