தி.மலை மண்சரிவு : பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள்… எ.வ.வேலு செய்த எதிர்பாரா செயல்!

Published On:

| By Kavi

திருவண்ணாமலை மண் சரிவால் வீடுகளை இழந்த 20 குடும்பங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு தனது சொந்த நிதியில் கட்டிய தற்காலிக வீடுகளை அவர்களிடம் ஒப்படைத்தார்.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த ஃபெஞ்சல் புயலால் திருவண்ணாமலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகர் பகுதியில் மண்சரிவு எற்பட்டது. இதில் பெரும் பாறைகள் உருண்டு வீட்டின் மேல் விழுந்ததில் 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அப்பகுதியில் சுமார் 20 வீடுகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

மண்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீட்கும் பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அமைச்சருமான எ.வ.வேலு பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு தனது குடும்ப அறக்கட்டளை சார்பில் சொந்த நிதியில் நல்லவன் பாளையம் பஞ்சாயத்து சமுத்திரம் பகுதியில் தகரத்தினால் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டை கட்டி வந்தார்.

அதன் கட்டுமான பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று அந்த வீடுகளை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “திருவண்ணாமலை மண்சரிவை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உடனடியாக தங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஆணையிட்டார். அதனை ஏற்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த 2 மாதமாக வாடகை வீட்டை பிடித்து கொடுத்து அங்கு வசிக்க ஏற்பாடு செய்தோம். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்தோம்.

இந்தநிலையில் நல்லவன் பாளையம் பஞ்சாயத்து சமுத்திரம் பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக வீடுகட்டி தருவது என முடிவு செய்தோம். அதன்படி எனது குடும்ப அறக்கட்டளை சார்பில் சொந்த நிதியில் 20 தற்காலிக வீட்டை கட்டியிருக்கிறோம். மண்சரிவால் பாதிக்கப்பட்டு வாடகை வீட்டில் இருந்தவர்கள் இன்று முதல் தற்காலிக வீட்டில் வசிக்கும் வகையில் சாவியை அவர்களிடம் ஒப்படைத்தோம்” என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தற்காலிக வீட்டை பெற்றுள்ள பெண்மணி பச்சையம்மாள் பேசுகையில், “இங்கு தான் நான் பிறந்தேன். திருமணம் செய்து இதே இடத்தில் தற்போது பேரன் பேத்தியுடன் வாழ்ந்து வருகிறேன். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் ரொம்ப பாதிக்கப்பட்டோம். எனினும் அமைச்சர் எ.வ.வேலு எங்களுக்கு தேவையான அனைத்து வசதியையும் செய்து கொடுத்தார். ஒருநாளும் அவர் எங்களை பட்டினியாக விடவில்லை. வாடகை வீட்டில் வசிக்க ஏற்பாடு செய்தார். இப்போது தற்காலிக வீட்டை கட்டி எங்களுக்கு கொடுத்துள்ளார். இந்த நேரத்துக்கு இது எங்களுக்கு போதும். விரைவில் அரசு எங்களுக்கு நிரந்தர வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share