திருப்பூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இன்று அதிகாலை கொல்லப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வ சிகாமணி – அலமாத்தாள் தம்பதி வசித்து வந்தனர்.
இவர்களது மகன் செந்தில் குமார். ஐ.டி. ஊழியரான இவர் தனது மனைவி குழந்தையுடன் கோவையில் வசித்து வந்தார். நேற்று (நவம்பர் 28) உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருப்பூர் வந்த செந்தில் குமார் இரவு தனது பெற்றோருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது தோட்ட பகுதியில் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் தெய்வ சிகாமணி வெளியே எழுந்து சென்று பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது தெய்வசிகாமணியை வெட்டி கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டில் புகுந்து தாயையும், மகனையும் கொன்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை செந்தில்குமார் ஏற்கனவே வரச்சொல்லியிருந்த சவரத்தொழிலாளி வந்து பார்த்த போது மூவரும் படுகாயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். தொடர்ந்து அவிநாசி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த அவிநாசிபாளையம் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி, இந்த கொலை குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படைகளை அமைத்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீசார் இவர்களது வீட்டில் சோதனை செய்த போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதனால் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்த வீட்டிற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளையும் மோப்ப நாய் மூலம் தோட்டப்பகுதிகளில் தடயங்களையும் சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த கொலை சம்பவம் தொடர்பாக “திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்-சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், “இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?” என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன. தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று தனது கண்டனத்தை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கொலை நடந்த இடத்தை திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா, சேலம் டிஐஜி உமா, ஈரோடு எஸ்.பி. ஜவகர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மன்னர் சார்லசுக்கும் இந்த இந்திய பெண்ணுக்கும் அப்படி என்ன கனெக்ஷன்?
அதானி விவாரத்தில் திமுக அரசை சும்மா விடமாட்டோம்… உயர்நீதிமன்றத்தை நாடும் பாமக