திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்!
திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருப்பதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர் டெய்ரி (AR Dairy) நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு கலப்படம் இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியது. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு கலந்திருந்தது ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது.
நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தானம் வெளியிட்டது.
அதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் திருப்பதிக்கு அனுப்பிய நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. நெய்யில் சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த ஏ.ஆர் டெய்ரி ஃபுட் நிறுவனம், எங்கள் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும், தேவஸ்தானத்திற்கு அனுப்பிய நெய்யில் கலப்படம் இல்லை என்றும் விளக்கம் அளித்தது.
இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செப்டம்பர் 20 ஆம் தேதி ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மாதிரியை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ரவி தலைமையிலான அதிகாரிகள் செப்டம்பர் 21 ஆம் தேதி காலை ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர், அந்த நிறுவனத்தில் உள்ள நெய் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் இடங்களை பார்வையிட்டு சோதனை நடத்தினர். மேலும் தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் பகுப்பாய்வுக்காக சேகரித்து சென்றனர்.
ஆய்வில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தின் 4 மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அனைத்தும் தரப் பரிசோதனையில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விளக்கம் கேட்டு அந்நிறுவனத்திற்குஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான கொள்முதல் பிரிவு பொது மேலாளர் முரளி கிருஷ்ணா, ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தின் மீது நெய்யில் கலப்படம் செய்ததாக திருப்பதி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த புகாரில் நெய் கொள்முதல் மற்றும் கலப்படம் உறுதி செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒப்பந்தங்கள் அனைத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், லட்டு தயாரிப்பதற்காக கர்நாடகா அரசின் நந்தினி பால் உற்பத்தி நிறுவனத்திடம் வாங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி இன்று அந்நிறுவனத்தில் இருந்து 10 லட்சம் லிட்டர் நெய் திருப்பதிக்கு வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சித்தராமையா வழக்கில் 3 மாதத்தில் அறிக்கை கேட்கும் சிறப்பு நீதிமன்றம்!
ஜம்மு காஷ்மீர் இரண்டாம் கட்ட வாக்குபதிவு : 1 மணி நிலவரம் என்ன?