திருநெல்வேலி திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டிபிஎம் மைதீன் கான் அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வரும் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக டி.பி.எம் மைதீன் கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மாநகர நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக உள்ள அப்துல் வகாப் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனை தன்னிச்சையாக செயல்பட விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாலும், திருநெல்வேலி திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியத்திற்கும் இவருக்குமான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும் மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட முன்னாள் மேயராக இருந்த மிசா பாண்டியன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர் நூர்ஜகானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை மாவட்ட காவல் ஆணையரிடம் நூர்ஜகான் புகார் அளித்தார். இதன்காரணமாக மிசா பாண்டியன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
செல்வம்