திருநெல்வேலி திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆன டிபிஎம் மைதீன் கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மே 21-ஆம் தேதி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை திருநெல்வேலி திமுகவினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த வஹாப்?
கல்லூரி படிக்கும்போது எஸ்.எஃப்.ஐ.யில் இருந்த அப்துல் வஹாப் அதன் பிறகு திமுக, மதிமுக, அதிமுக என ஒரு பயணம் நடத்திவிட்டு மீண்டும் திமுகவுக்கு வந்தார்.
திமுகவின் கட்சித் தேர்தலில் வட்டப் பிரதிநிதிக்கு போட்டியிட்டு தோற்றவர்தான் இந்த வஹாப். ஆனால் 2012 ஆம் ஆண்டு நெல்லை மாநகர செயலாளர் ஆன அரசியல் அதிசயம் நடந்தது. 2012 இல் திமுக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக கூட வரமுடியவில்லை. தேமுதிகதான் எதிர்க்கட்சியாக வந்தது. அப்போது திமுகவில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று அழகிரி பிரச்சினை செய்துகொண்டிருந்தார். திமுகவின் நெல்லை மாசெ வாக இருந்த கருப்பசாமி பாண்டியன் அழகிரி ஆதரவாளர்களை திட்டமிட்டு ஒதுக்கினார்.
நெல்லை மாநகர செயலாளர் பதவியில் இருந்த அழகிரி ஆதரவாளரான மாலைராஜா இதைக் கண்டித்து ராஜினாமா செய்தார். அப்போது மாநகர செயலாளர் பதவிக்கு கட்சியில் வலுவாக இருப்பவர்களையோ வலுவான சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையோ கொண்டுவந்தால் மறுபடியும் பிரச்சினை எழலாம் என கருதிய கருப்பசாமி பாண்டியன் தனது ஆதரவாளராக இருந்தவரும் வட்ட பிரதிநிதி தேர்தலிலேயே தோற்றவருமான அப்துல் வஹாப்பை மாநகர செயலாளர் ஆக்கினார். மாநகர செயலாளர் பதவிக்கு முன் வஹாப் எந்த கட்சிப் பதவியிலும் இல்லை.
மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் அறை மேல் தளத்தில் இருந்தது. கீழே இறங்கி வந்தால் கூட தனது தரம் குறைந்துவிடும் என்று செயல்பட்டவர் கானா. அப்போது கீழ்த் தளத்தில் இருந்தபடியே கானாவை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி அனுப்பி மெல்ல மெல்ல கட்சிக்குள் தன்னை ஊன்றிக் கொண்டார் வஹாப். வஹாப் செய்த குழப்பத்தால் கட்சித் தேர்தலையே நிறுத்துமாறு ஆள் வைத்து வழக்கு போட வைத்தார் கானா. இதில் கடுப்பானார் கலைஞர். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி தலைமைக்கு தாறுமாறான தகவல்களை அனுப்பி மாவட்டச் செயலாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் வஹாப்.
*அப்துல் வஹாப் மாசெ பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? *
அப்துல் வஹாப் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை நெல்லை திமுகவினர் வட்டாரத்தில் விசாரித்தோம்.
“என்றோ எடுக்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கை… ஆனால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்ணெதிரிலேயே சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை அடுத்து மிகவும் தாமதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான அப்துல் வஹாப் பாளையங்கோட்டை திருநெல்வேலி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் செயலாளர்.
திமுக ஆட்சி அமைத்ததிலிருந்தே இவர் மீதான புகார்களும் பூதாகரமாக தொடங்கிவிட்டன. வகாபை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலானோர் சட்டம் ஒழுங்குக்கு சவால் விடுப்பவர்கள் என்று உளவுத்துறையும் ரிப்போர்ட் போட்டது.
நெல்லை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு பகுதி செயலாளர்களில் மேலப்பாளையம் பகுதி செயலாளர் துபாய் சாகுல் தவிர மீதி மூவரும் அறிவாலயத்துக்கு சென்று மாவட்ட செயலாளர்கள் வஹாப் மீது புகார் மேல் புகாராக கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் மாநகர செயலாளர் சுப்பிரமணியனே அந்த நிலைக்கு வந்து விட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற போது மேயர் மற்றும் மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கான செலக்ஷனிலும் வஹாபின் கை தான் ஓங்கி இருந்தது. திருநெல்வேலி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெயருக்குத்தான் சரவணன் மேயர் என்றாலும், அறிவிக்கப்படாத மேயராக அப்துல் வஹாபே செயல்பட்டார். கவுன்சிலர்கள் கூட்டங்கள் நடைபெற்றபோது கூட வஹாப்பின் பேச்சுகளால் கோபமான மேயர் சரவணன், ‘நான் என்ன சும்மாவா வந்தேன். 5 கோடி ரூபாய் கொடுத்துதானே வந்தேன்?’ என்றெல்லாம் பதில் சொன்னதாக சில மாதங்களுக்கு முன்பே பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் மேயருக்கும் அப்துல் வஹாபுக்கும் சரிப்பட்டு வராததால் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் கூட மேயர் பங்கேற்காத விசித்திரம் நெல்லையில் நடந்தது.
பொதுச் செயலாளர் துரைமுருகன் கண்ணெதிரே மோதல்
இந்த நிலையில் திமுக அரசின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்துக்காக மே 7 ஆம் தேதி கன்னியாகுமரி சென்ற திமுக பொதுச் செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் குமரி நிகழ்ச்சி முடிந்ததும் துறை சார்ந்த பணிகளாக நதி நீர் திட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின் 8 ஆம் தேதி நெல்லை வந்தவருக்கு மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் வரவேற்பளித்தார். அதேநேரம் மாநகராட்சி மேயர் சரவணனும் வரவேற்பு அளித்தார். ஏற்கனவே அப்துல் வஹாபுக்கும் சரவணனுக்கும் பிரச்சினை இருந்த நிலையில்…. வரவேற்பு கொடுப்பதில் ஏற்பட்ட போட்டியில் இரு தரப்பினரும் துரைமுருகன் முன்னிலையிலேயே நடு ரோட்டில் தாக்கிக் கொண்டனர். இதுபற்றி அன்றே தலைமைக்கு ரிப்போர்ட் போனது. பொதுச் செயலாளர் துரைமுருகன் தன் கண்ணெதிரே நெல்லையில் நடந்த மோதலை திமுக தலைவரான ஸ்டாலினிடம் விளக்கியிருக்கிறார்.
இதெல்லாம் வஹாப்பின் மீதான வில்லங்கங்களை அதிகரித்துக் கொண்டே போன நிலையில்… திமுக நிர்வாகியின் மனைவியிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு போன புகார்தான் அப்துல் வஹாப்பின் பதவி பறிப்பிற்கான உடனடி காரணமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் திமுக நிர்வாகிகளே.
சொத்துகளை கேட்டு நடுவீட்டில் வஹாப்பின் பி.ஏ. மிரட்டல்!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றிய துணை சேர்மனாக இருந்தவர் நயினார். திமுக காரரான இவர் அண்மையில் காலமானார். நயினாருக்கு க்ரஷர் உள்ளிட்ட ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன. அவர் இறந்த பிறகு அவரது மனைவியான டாக்டர் அமரின் சப்ரான் திருநெல்வேலி மாவட்ட எஸ்பிக்கு புகார் அனுப்பியிருக்கிறார். அதுமட்டுமல்ல திமுக வாட்ஸ் அப் க்ரூப்பிலும் தனது குரலிலேயே முக்கியமான புகார்களை பதிவிட்டார். அமரின் சப்ரான் புகாரை அடுத்து அவரை மே 13 ஆம் தேதி மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு ஆதாரங்களுடன் அழைத்த போலீஸார் விசாரணையும் செய்தனர்.
அப்போது அமரின் சப்ரான் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மீது அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்திருக்கிறார். ‘என் கணவர் இறந்த பிறகு என் சொத்துகளை அபகரிப்பதில் வஹாப் தீவிரமாக இருக்கிறார். வஹாப்பின் ஆதரவாளர் ஜஹான் என்பவர் என்னை மிரட்டுகிறார். இதுபற்றி வஹாப் அங்கிளிடம் போய் கேட்டால், ‘நான் ஜஹானை ஆபீஸ் பக்கமே வர விடுறதில்லையே’ என்று சொல்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வாரமாக வஹாப்பின் பி..ஏ. என் வீட்டுக்கு வந்து நடு வீட்டில் ஹாலில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்திருக்கிறார். நயினார் ப்ராப்பர்டிஸ் அத்தனைக்கும் நான் சைன் போட்டு கொடுக்க வேண்டும் என்று நிற்கிறார்கள். என் சொத்துகளை கூட நான் போராடி மீட்டிடுவேன் ஆனால் எனக்கோ என் பிள்ளைகளுக்கோ ஏதாவது ஆனது என்றால் அதற்கு ஜஹான்,. வஹாப் எம்.எல்.ஏ. அவர் பிஏ இவங்கதான் காரணம்” என்று வாட்ஸ் அப் மெசேஜிலும் தெரிவித்திருக்கிறார் அமரின் சப்ரான்.
திமுக நிர்வாகி மறைந்த பிறகு அவரது மனைவியை மிரட்டி சொத்துகளை அபகரிக்கப் பார்த்த புகார்தான் வஹாப்பின் மீது திமுக தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
வஹாப்பை மாசெ பதவியில் இருந்து அகற்ற முடிவெடுத்த தகவல் கிடைத்ததும் வஹாப்பின் ஆதரவு திமுக நிர்வாகி ஒருவர் அமைப்பு துணைச் செயலாளர் அன்பகம் கலையைத் தொடர்புகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் அன்பகம் கலை, ‘ஒரு புகார் ரெண்டு புகார்னா ஏதாச்சும் பண்ணலாம்ணே… எந்தப் பக்கம் திரும்பினாலும் புகார்னா என்னண்ணே பண்றது?” என்று கேட்டிருக்கிறார்.
அப்துல் வஹாப்பை மாசெ பதவியில் இருந்து பறித்த நிலையில்… 76 வயதான முன்னாள் அமைச்சரான டிபிஎம் மைதீன் கானுக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்திருக்கிறது திமுக தலைமை.
‘ஏற்கனவே ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கிய பிறகு இஸ்லாமியர் ஒருவருக்கு அந்த இடம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில் அந்த இடத்துக்கு வஹாப் ஒருவர்தான் திமுக எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் தகுதியானவராக இருந்தார், அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு மாசெ பதவியும் பறிக்கப்பட்டிருப்பது நெல்லை வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது
வேந்தன்
ரூ.2000 நோட்டுகள்: பொதுமக்களுக்கு சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவுரை!