அதிமுக கூட்டத்தில் களேபரம்… வேலுமணி முன்பு மோதிக்கொண்ட நிர்வாகிகள்!

Published On:

| By Selvam

நெல்லை அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களுக்கும், தற்போதய மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் அதிமுக கள ஆய்வுக்கூட்டம் உடையார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நெல்லை முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா பேசும்போது, “கட்சியினுடைய அடிப்படை கட்டமைப்புகளை நாம் வலுப்படுத்த வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளோம். தற்போது மாவட்ட செயலாளராக இருக்கும் கணேஷ் ராஜா கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தவில்லை” என்று பேசினார்.

இதனையடுத்து பேசிய நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, பாப்புலர் முத்தையாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது கணேஷ் ராஜா ஆதரவாளர்கள், பாப்புலர் முத்தையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். பதிலுக்கு பாப்புலர் முத்தையா ஆதரவாளர்களும் கோஷமிட்டதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த எஸ்.பி.வேலுமணி மைக் அருகே சென்று இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவர்கள் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து மோதலில்  ஈடுபட்ட 25-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கள ஆய்வு கூட்டமானது நடைபெற்று வருகிறது.

செல்வம்   

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது?

அதானியுடன் ஜெகன் மோகன் ஒப்பந்தமா? – ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel