வைகோ வீட்டில் திருமா: பேசப்பட்ட முக்கிய விஷயங்கள்!

அரசியல்

பேட்டி ஒன்றில் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவமதிப்பதாக இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில்… அதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வைகோவின் வீட்டுக்கே  திருமாவளவன் இன்று (மார்ச் 11) சென்று சந்தித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் எம்ஜிஆரை தவிர பிற தலைவர்கள் மீது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நம்பிக்கை இழந்து விட்டார்’ என்று குறிப்பிட்டார். 

அப்போது பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர், ‘வைகோவை கூட பிரபாகரன் நம்பவில்லையா?’ என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் திருமாவளவன் கடந்து சென்று விட்டார். இதன் மூலம் வைகோ மீதும் பிரபாகரன் நம்பிக்கை வைக்கவில்லை என்ற தொனியில் திருமாவளவன் பேட்டி அமைந்திருந்ததாக மதிமுகவினர் சமூக வலைதளங்களில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக மதிமுக துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், “திருமாவளவனின் பேட்டி மன வேதனையை தருகிறது” என்று ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று மார்ச் 11ஆம் தேதி பகல் சென்னை அண்ணா நகரில் இருக்கும் வைகோவின் வீட்டுக்கு திருமாவளவன் சென்று அவரை சந்தித்தார். 

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  “திருமாவளவன் அரசியலில் இன்னும் இன்னும் உயர வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும்போதிலிருந்து சொல்லி வருகிறேன். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலை அடிப்படையாக வைத்து ஒரு நியாயமற்ற, வருந்தத்தக்க விதத்தில் தேவையற்ற ஒரு விமர்சனம் உலவ ஆரம்பித்தது. அவர் உடனே மிகவும் வருத்தப்பட்டு, அண்ணனை நான் எவ்வளவு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன் என்று என்னிடம் கூறினார்.  உங்க மேல எந்த வருத்தமும் இல்லை என்று நான் சொன்ன பிறகும் நேரடியாகவே வருகிறேன் என்று சொல்லி என் வீட்டுக்கு வந்தார்.  அந்த விஷயத்தைப் பத்தி ஐந்து நிமிடம்தான் பேசியிருப்பேன். மற்ற பல விஷயங்களைப் பேசினோம்” என்றார் வைகோ,.

பிறகு பேசிய  திருமாவளவன்,  ‘அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியில் ஈழத் தமிழர் தொடர்பான கருத்துகளை நான் பேச நேர்ந்தது. அதில் பேட்டி கண்டவர் அண்ணன் பெயரை குறிப்பிட்டு குதர்க்கமாக ஒரு கேள்வியை எழுப்பினார். அதை நான் பதில் சொல்லாமல் கடந்து போனேன். அது தவறான புரிதலை கொடுத்துவிட்டது.

ஈழ விடுதலை அரசியல் தொடங்கிய காலத்தில் இருந்து  தமிழகத்தில் இந்திய அளவில் மிகப்பெரும் பங்களிப்பு செய்தவர் அண்ணன் வைகோ என்பதை நாடறியும். அதனால்  அவர் சந்தித்த நெருக்கடிகள், அரசியல் பின்னடைவுகளும், சிறைக் கொடுமைகளும், ஒட்டுமொத்த குடும்பமே சந்தித்த பாதிப்புகளும் ஏராளம். மதிமுக தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்வதற்கான எல்லா சூழலும் இருந்தும் ஈழ அரசியல்தான் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது வரலாறு.

இன்றைக்கும் உலகம் எங்கும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அண்ணன் வைகோவை முதலிடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். தமிழகத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவராக அண்ணனை வைத்து போற்றும் நிலையில் நேரில் பார்த்து பேச விரும்பினேன். பல்வேறு விஷயங்கள் தமிழக அரசியல், எதிர்கால அரசியல் குறித்தெல்லாம் பேசினோம். இந்த சந்திப்பு மன நிறைவாக இருந்தது” என்று குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குள்ளான அந்த பேட்டி பற்றி ஐந்து நிமிடங்கள்தான் பேசினோம் என்றும் மற்ற பல விஷயங்கள் பற்றித்தான் அதிகமாக பேசினோம் என்றும் இருவருமே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

வேந்தன்

கே.ஜி.எஃப் வில்லனை வரவேற்ற விஜய்

’துரோகி’ : எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட சக பயணி

+1
1
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0