வைஃபை ஆன் செய்ததும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூட்டு வலிக்காக கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தகவல் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதுபற்றி விசாரித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மே 30 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் எடப்பாடிக்கு என்ன ஆச்சு என்ற தலைப்பில் அவரது உடல் நிலை பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்தது. கை, கால் வலி மற்றும் வயிற்று வலியால் எடப்பாடி அவதிப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படியே ஓரிரு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கோவைக்கு சென்று மூட்டு வலி சிகிச்சைக்கு புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் மூட்டு வலிக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடிக்கு இரு கால் மூட்டுகளிலும் வலி ஏற்பட்டிருக்கிறது. தொடர் கார் பயணங்கள், அண்மையில் அவரது பிறந்தநாளின் போது பல மணி நேரம் நின்றுகொண்டே இருந்தது எல்லாம் சேர்ந்து எடப்பாடியின் கால் மூட்டுகளில் கடுமையான வலியை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் கோவை சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில்தான் ஓய்வின் போதும் கட்சியில் சில அதிரடிகளை நடைமுறைப்படுத்தும் வகையில் தனக்கு நெருக்கமானவர்களோடு முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டிருக்கிறார் எடப்பாடி. அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் பற்றிய ஆலோசனைதான் அது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் உட்கட்சிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அதிமுகவில் பெரிதாக நிர்வாகிகள் மாற்றம் எதுவும் நடக்கவில்லை. அதுவும் குறிப்பாக கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்றுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையேயான மோதலுக்குப் பின்னர் கட்சி இப்போது எடப்பாடியின் வசம் வந்திருக்கிறது.
ஆனபோதும் தற்போதும் கணிசமான மாவட்டச் செயலாளர்கள் திமுகவோடும், பன்னீரோடும் தொடர்பில் இருப்பதாக எடப்பாடிக்கு தகவல்கள் சென்றிருக்கின்றன. சில மாவட்டச் செயலாளர்களின் திமுக தொடர்பு பற்றி உறுதியான தகவலும் எடப்பாடிக்கு கிடைத்திருக்கிறது.
குறிப்பாக வட மாவட்டங்களில் இருக்கும் மாசெக்கள் திமுகவின் அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் எடப்பாடி அறிந்து அதிர்ச்சியாகியிருக்கிறார். எடப்பாடி ஆளுங்கட்சியாக இருந்தபோது திமுகவினர், அந்தந்த மாவட்ட அதிமுக அமைச்சர்களோடு தொடர்பில் இருந்தார்கள் என்று ஸ்டாலினுக்கு அப்போது தகவல்கள் சென்றன என்பது குறிப்பிடத் தக்கது.
அதேபோல இப்போது திமுகவில் இருக்கும் அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடு அதிமுக மாசெக்கள் நெருக்கமான தொடர்பில் இருப்பதை அறிந்திருக்கிறார் எடப்பாடி. மேலும் கடந்த ஈரோடு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி எதிர்பார்த்த மாதிரி முன்னாள் அமைச்சர்களான மாசெக்கள் யாரும் செலவு செய்யவில்லை. இதுவும் எட்பபாடிக்கு ஒரு வருத்தம்.
இந்த பின்னணியில்தான் அதிமுக முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், தனக்கு நூறு சதவிகிதம் விசுவாசமான மாசெக்கள் இருக்க வேண்டும் என்று கருதுகிறார் எடப்பாடி. அதற்காகத்தான் கணிசமான மாசெக்களை புதிதாக நியமிக்க நினைக்கிறார். ஆனால் அது அவ்வளவு எளிதானதல்ல என்பதும் எடப்பாடிக்கு தெரியும்.
ஏற்கனவே உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவை எடப்பாடி தலைமைக்கு க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டாலும்….பன்னீர் தொடர்ந்துள்ள சிவில் வழக்கும் இன்னமும் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கிலும் தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார் எடப்பாடி. அதன் பின் ஒரு பிசிறு கூட தனக்கு பாதகம் இல்லாத சூழலில்தான் அதிமுகவின் மாசெக்களை மாற்ற முடிவு செய்திருக்கிறார். அதுவும் மாற்றப்படும் மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி அடையாமல் இருக்க, அவர்களுக்கு அமைப்புச் செயலாளர் போன்ற மாநிலப் பொறுப்புகள் கொடுக்கலாம் என்ற ஆலோசனையும் எடப்பாடி வட்டாரத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
வரும் ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் வைத்திலிங்கம் இல்லத் திருமணத்தில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பங்கேற்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அப்படி அவர்கள் இணைந்து பங்கேற்றால் அது அதிமுகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. இந்த நிலையில்தான் தனக்கான முழுமையான சாதகமான சூழல் நிலவியதும் அதிமுக மாசெக்களை மாற்றிட முடிவு செய்திருக்கிறார்.
அதுபற்றியான பட்டியலைக் கூட சேலம் இல்லத்தில் ஓய்வெடுத்தபடியே தயார் செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் சேலம் வட்டாரத்தில். இந்த விவகாரம்தான் இப்போது அதிமுகவின் முக்கிய தலைகளுக்குள் விவாதிக்கப்பட்டு வருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
சிறுமி விஷ்ணுபிரியா தற்கொலை: முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்!
ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்தியா