தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு முன் அங்கு நிலவிய தீவிரமான சூழலைச் சேலம் வரை சென்று எடப்பாடி பழனிசாமியிடம் அப்போதைய உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி கூறியும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இன்று (அக்டோபர் 18) பொதுவெளியில் வெளியிடப்பட்டது.
அதில், “துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஊடகத்தில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது பொய்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, தூத்துக்குடியில் நிலவும் சூழலை முன்கூட்டியே சேலம் வரை சென்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அருணா ஜெகதீசன் அறிக்கையில், “அப்போதைய நுண்ணறிவு காவல்துறைத் தலைவர் கே.என்.சத்தியமூர்த்தியின் (எ.த.சா.249) கருத்தைக் குறிப்பாக பார்க்க வேண்டும்.
அவர் சாட்சியத்தில் இது சம்பந்தமாக நுண்ணறிவு அறிக்கைகள் சேகரித்து இருந்ததாகவும், அதில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல மாட்டார்கள்.
இதனால் இடதுசாரி அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் போராட்டத்தில் பெருமளவு கலந்து கொள்வார்கள் என்று கிடைத்த தகவலை உடனடியாக காவல்துறை இயக்குநர் ராஜேந்திரனிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் சாட்சியத்தில் இது சம்பந்தமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சேலத்தில் சந்தித்து மீன்வளத்துறை செயலாளர் மூலம் மீனவர் சங்கத்தைச் சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு கூறலாம் என்ற கருத்தைத் தான் சொன்னதாகவும்,
அதற்கு அப்போதைய முதலமைச்சர் தேவையானவற்றைச் செய்வதாகச் சொன்னார் என்றும் கூறியுள்ளார்.
துரதிருஷ்டவசமாக உடனடியாக தொடர் நடவடிக்கை எடுக்காததால் நுண்ணறிவு தலைவரின் நற்கருத்தைக் கொண்ட முயற்சி பலன் அளிக்காமலும் சூழ்நிலையைத் தணிக்க இயலாமலும் போய்விட்டது.
தூத்துக்குடியில் நிலவிய தீவிரத் தன்மையான சூழ்நிலை சம்பந்தமாக வேறு யாரும் அல்ல மாநில நுண்ணறிவு தலைவரே முதலமைச்சரைச் சந்திப்பதற்காகச் சேலம் வரை சென்று முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக முதலமைச்சருக்கு இவ்வலுவான நுண்ணறிவு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தும் கடுமையான சட்ட ஒழுங்கு நிலைமை கவனிக்கப்படாமல் இருந்தது வியப்பை ஏற்படுத்துகிறது.
இந்தக் கடுமையான பிரச்சினையைத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டிருந்தால் முற்றிலுமாக இந்த பிரச்சனையை ஆரம்பக் கட்டத்திலேயே திறம்படச் சமாளித்து இருக்கலாம்.
அவ்வாறு செய்யாதது அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்ததற்கு ஒரு உன்னதமான உதாரணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரியா
திருப்பதி போறீங்களா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
ஜெ.வின் கால்களுக்கு என்னாச்சு? ஆறுமுகசாமி தெளிவுபடுத்திய உண்மை!