அமைச்சர் மீது சேற்றை வாரி இறைத்ததை ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுர இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (டிசம்பர் 5) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மழை வெள்ள பாதிப்பு, சாத்தனூர் அணை திறந்தது ஆகியவை குறித்து பேசிய ராமதாஸ், “நவம்பர் 29 ஆம் தேதியே மத்திய நீர்வள ஆணையம் சாத்தனூர் அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்தும் திராவிட மாடல் அரசு அதனை செய்யாமல் குறட்டை விட்டு தூங்கிவிட்டது.
முன்னறிவிப்பு இல்லாமல் அணையை திறந்து விட்டது தான் பாதிப்பிற்கு காரணம்.
நள்ளிரவில் அணையை திறப்பதாக எச்சரிக்கை விடுத்தால் மக்களுக்கு எப்படி சென்றடையும்” என்று வெள்ள பாதிப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.
மேலும், “சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதைத்தான் நாங்கள் சொல்லி வருகிறோம். இதை ஏன் மாநில அரசு செயல்படுத்த தயங்குகிறது என்பதே வினா. மீண்டும் மீண்டும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவது ஏன்?. மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் ராமதாஸ்.
பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது தொடர்பான கேள்விக்கு, இத்தகைய செயலை ஏற்க முடியாது. அது தவறு. அனுமதிக்கவும் கூடாது. மக்களின் கோபத்தின் வெளிப்பாடு என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
முதல்வரானார் ஃபட்னாவீஸ் : துணை முதல்வர்களான ஷிண்டே, அஜித் பவார்