அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு : என்ன நடந்தது?


அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

அதேசமயம் தென்பெண்ணை ஆறு முழுவதும் ஆக்கிரமிப்பு மற்றும் கருவேல முள் புதர்கள் அடர்த்தியாக இருந்ததால் தண்ணீர் உள்வாங்காமல், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை என தென்பெண்ணை ஆற்றோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் தண்ணீர் புகுந்ததால் இன்று காலை சென்னை – திருச்சி பைபாஸ் சாலையில் அந்தபகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கிராமம் விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் வருகிறது.

இதனால் வனத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை 11 மணியளவில் சென்றனர்.

அப்போது அங்கிருந்த மக்கள் அமைச்சரை பார்த்து, “காரை விட்டு இறங்கி ஊரை வந்து பாருங்கள்” என்று சத்தம் போட்டனர்.

உடனடியாக அமைச்சர் பொன்முடியும், அவரது மகனுமான கவுதம சிகாமணியும், மாவட்ட ஆட்சியரும் காரை விட்டு இறங்கிச் சென்றனர்.

அப்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள், அமைச்சர் பொன்முடி, கவுத சிகாமணி ஆகியோர் மீது சேற்றைவாரி இறைத்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்நிலையில் பாதுகாப்புக்கு சென்றிருந்த போலீசார் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை காரில் ஏற்றி அழைத்து வந்தனர்.

அங்கு என்ன நடந்தது என்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினோம்.

“சென்னை – திருச்சி பைபாஸ் சாலை வெள்ளத்தில் மூழ்கி, எங்கள் ஊரான இருவேல்பட்டும் வெள்ளத்தில் மூழ்கியது. கடந்த இரண்டு நாட்களாக உண்ண உணவு இல்லை… குடிக்க தண்ணீர் இல்லை… உறங்க இடம் இல்லை… எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்து வரும் எங்கள் கோரிக்கையை கேட்க யாரும் இல்லை.

இதனால் தான் மறியலில் ஈடுபட்டோம். அமைச்சர் வந்தபோது, பசியிலும் கோபத்திலும் இருந்த சில இளைஞர்கள் ஆத்திரத்தை வெளிபடுத்தி சேற்றை அள்ளி தெளித்துவிட்டனர்” என்றார்கள்.

அமைச்சருடன் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.

“இந்த ஊர் (இருவேல்பட்டு) கிராம மக்கள் பெண்ணை ஆறு அருகில் உள்ள மலட்டாற்றை ஒட்டிய படி, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்தநிலையில் எதிர்பாராத அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. இதற்கு அமைச்சர் என்ன செய்வார்?

எனினும் சேற்றை வாரி இறைத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அமைச்சர் கூறிவிட்டார்.

அந்த கிராமத்தில் குறிப்பிட்ட கட்சியினர் அதிகமாக வசிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டனர் போலீஸ் வட்டாரத்தில் .

தற்போது அமைச்சர் சட்டையில் சேற்றுடன் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வணங்காமுடி

வெள்ள பாதிப்பு : நிவாரணம் அறிவித்த ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா?

கும்பமேளா: 5 நட்சத்திர டெண்டில் தங்க ஒரு நாள் ரேட் எவ்வளவு தெரியுமா?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts