வாக்களிக்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்… அடுத்தடுத்து மூன்று பேர் பலி!
மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு செய்ய சென்ற மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி இன்று காலை அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வாக்களிக்க தனது மனைவியுடன் சென்றார்.
ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.
ஆனால் சிறிது நேரத்தில் வாக்குச்சாவடியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார் .
இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பழனிசாமி, ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பழனிசாமியின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சேலத்தில் மற்றொரு வயதான நபர் வாக்களிக்க சென்ற போது உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு கொண்டையம்பள்ளி ரோடு பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்ன பொண்ணு (77) தனது மகன் கோவிந்தராஜுடன் வாக்களிக்க சென்றார் .
அப்போது விரலில் மை வைத்த நிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் அருகில் சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வாக்கு செலுத்த சென்ற கனகராஜ் என்ற 59 வயது முதியவரும் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வாக்களிக்க சென்று அடுத்தடுத்த மூன்று பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்த… ‘கேப்டன் அமெரிக்கா’ ஆக்ஷன் இயக்குநர்!
ஈவிஎம்-ல் வேறு மென்பொருளை ஏற்ற முடியுமா?: முன்னாள் தேர்தல் ஆணையர் பேட்டி!