அரசியலும் சினிமாவும் இரண்டற கலந்த தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வர ஆசைப்படுவதும் அதனால் அவர்கள் நடிக்கும் படங்கள் வெளியீட்டின்போது சிரமங்களை, எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை தொடர்கிறது. இதில் எம்.ஜி.ஆர். மட்டுமே வெற்றிவாகை சூட முடிந்தது
ரஜினிகாந்த் அரசியல் வேண்டாம் என அறிவித்து ஒதுங்கிவிட்டாலும் கமல்ஹாசன் கட்சி தொடங்கி தூய்மையான அரசியல், ஆட்சி, அதிகாரம் என பேசி இரண்டு பொது தேர்தலை சந்தித்தாலும் மக்கள் அவரை முழுமையான அரசியல்வாதியாக இன்னும் ஏற்கவில்லை. விக்ரம் திரைப்படம் வணிகரீதியாகஅவரது திரையுலக வாழ்க்கையில் உச்சகட்ட வெற்றியை தந்ததால் அரசியலை இரண்டாம் பட்சமாக்கி சினிமாவில் மீண்டும் தீவிரமாக களமாட தொடங்கிவிட்டார் கமல்ஹாசன்.
கட்சி தொடங்கிய நாள் முதல் எந்த கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தாரோ அந்த கட்சியின் இளைஞர் அணி தலைவர், நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பல தளங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் கருணாநிதி குடும்பத்தின் அடுத்த வாரிசு உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து படம் தயாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. உதயநிதி அமைச்சர் ஆனதால் அந்த ப்ராஜக்ட் ரத்து செய்யப்பட்டது.
வணிகம், வருமானம் என்று வந்துவிட்டால் கொள்கை அரசியல் சமரசம் செய்துகொள்ளப்படும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் கமல்ஹாசன் – உதயநிதி ஸ்டாலின் கூட்டணி என்ற விமர்சனங்களும் எழுந்தன.
வாரிசுக்கு வாழ்த்துகள்
இந்த நிலையில்தான் டிசம்பர் 24 மாலை சென்னை நேரு உள்விளையாட்டு உள் அரங்கில் நடைபெற்ற” வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அந்தப்படத்தின் கதாநாயகன் ஜோசப் விஜய், “வாரிசுக்கு வாழ்த்துகள். பொறந்த குழந்தைக்கு சொன்னேன். வாரிசு – 2 எப்போ சார்” என்று படத்தின் தயாரிப்பாளரை பார்த்து கேட்டுள்ளார்.
வழக்கமான சினிமா மேடைகளில் பிறர் பேசி இருந்தால் இது வழக்கமான சினிமா ஜிகினா வார்த்தைகள் என கடந்துபோகலாம்.
ஆனால் வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது, அஜீத்குமார் நடிப்பில் அதே நாளில் வெளியாகும் துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதி வெளியிடுவதால் வாரிசுக்கு நெருக்கடி என்கிற தகவல் தினசரி செய்திகளாக மாறிய நிலையில்,
யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாட்டின் முக்கியமான விநியோக பகுதிகளில் வாரிசு படத்திற்கு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்தார் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தரும், விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிப்பவருமான லலித்குமார்.
இவையெல்லாம் முடிந்த பின்னர் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்வில்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வஞ்சப் புகழ்ச்சியாக, ’வாரிசுக்கு வாழ்த்துக்கள்’ என நுட்பமான அரசியல் பேசியுள்ளார் விஜய்.
அதே மேடையில், ’1990 காலகட்டத்தில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக மாறினார். பின்னர் அவர் ஒரு தீவிர போட்டியாளராக மாறினார். அவருடைய வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன். நான் அவரைவிட வெற்றிபெற விரும்பினேன்.
அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை. அந்தப் போட்டியாளர் ஜோசப் விஜய்தான்’ என்று குறிப்பிட்டு, நானே எனக்கு போட்டி என என அழுத்தம் கொடுத்து பேசியுள்ளார் நடிகர் விஜய்.
நான் கிறிஸ்துவன் தான்…
படங்களில் விஜய் என்கிற பெயரை பயன்படுத்துகிறவர் சமீப காலங்களாக அவர் வெளியிடும் அறிக்கைகளிலும், தன் சம்பந்தப்பட்ட விழாக்களிலும் ஜோசப் விஜய் என பேசுவதும் ஒரு நுட்பமான அரசியல்தான்.
ஹெச். ராஜா போன்ற பாஜக தலைவர்களும், இந்து மத தலைவர்களும் நடிகர் விஜய்யை விமர்சிக்கின்றபோது ஜோசப் விஜய் என்றே குறிப்பிடுவது வழக்கம். அவரை ஒரு கிறிஸ்தவராக பொதுவெளியில் அடையாளப்படுத்தி இந்துக்களிடம் இருந்து அந்நியப்படுத்த முயற்சித்து வந்தனர், வருகின்றனர்.
இந்த நிலையில்தான் தமிழக அரசியல்வாதிகளும், சினிமா துறையினரும் விழாவில் விஜய் என்ன பேசப் போகிறார் என உற்று நோக்கிய மேடையில் அவராலேயே “ஜோசப் விஜய்” என்ற பெயர் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டுள்ளது.
’ஆம் நான் கிறிஸ்தவன்தான் எனக்கு பின்னால் இருக்கும் ரசிகர் கூட்டம், என்னை ஆராதிப்பதைப் பாருங்கள்’ என்பதை பாஜக, இந்து மத தலைவர்களுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திற்கும் விஜய் சொல்லுகிற செய்தியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.
வணிக லாபத்திற்காக எந்த வகையிலான சமரசங்களையும் அரசியல்வாதிகள் செய்துகொள்வார்கள் என்கிற தைரியம், நம்பிக்கைதான் உதயநிதி ஸ்டாலின் பெயரை நேரடியாக கூறி வாழ்த்துக் கூறாமல்” வாரிசுக்கு வாழ்த்துக்கள்” என்கிற வசனத்தின் மூலம் வஞ்சப்புகழ்ச்சி செய்ய முயற்சித்திருக்கிறார் நடிகர் விஜய்.
1990 முதல் போட்டியாளர் அஜீத்
எம்.ஜி.ஆர்.- சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இவர்கள் தங்களது தொழில் போட்டியாளர்களை பொதுமேடைகளில், சினிமா விழாக்களில் விமர்சனம் செய்து பேசியது இல்லை. சக போட்டியாளருக்கு எதிராக தாங்கள் நடிக்கும் படத்தில் பஞ்ச் வசனங்களை பேசியதில்லை. ஆனால் அதனை தமிழ் சினிமாவில் தொடங்கிவைத்த பெருமை நடிகர் விஜயை சேரும்.
1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய அஜீத்குமார் காதல் கோட்டை (1996), அவள் வருவாளா (1998), காதல் மன்னன் (1998), அமர்க்களம் (1999), வாலி ( 1999) வரலாறு (2006), கிரீடம் (2007) மற்றும் பில்லா (2007) ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு விஜய்க்கு சமபல போட்டியாளராக மாறிய அஜீத்குமாரை தான் வஞ்சப்புகழ்ச்சியாக “1990 காலகட்டத்தில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக மாறினார்” என வஞ்ச புகழ்ச்சியாக பேசியுள்ளார் விஜய்.
நடிப்பு, நடனம், சண்டைக்காட்சிகளில் நுட்பமான நுண்ணறிவு கொண்டவர் கற்பூரம் போன்றவர் என அவருடன் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமா மேடைகளில், பேட்டிகளில் கூறி வந்துள்ளனர்.
அதேபோன்று ஒரு படம் வெற்றிபெற்ற பின் சம்பளத்தை உயர்த்தி கேட்பார்கள் நடிகர்கள். ஆனால் விஜய் நமக்கு நாமே திட்டம் போன்று உறவினருக்கு கால்ஷீட் வழங்கி அந்தப் படத்தில் தனது சம்பளம் 100 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் இடம்பெற வைத்தவர் நடிகர் விஜய். அதன் பின்னர் வெளி தயாரிப்பாளர்களும் 100 கோடிக்கு குறைவான சம்பளத்திற்கு தனது கால்ஷீட்டை கேட்க முடியாத சூழலை நுட்பமாக பயன்படுத்தியதால் வாரிசு படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளமாக பெற முடிந்திருக்கிறது.
அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கட்டுப்பாட்டில் இருந்தவரை அவரை கடந்து சுயமாக எதனையும் செய்ய முடியாத விஜய். தலைவா படத்திற்கு பின் சுயமாக முடிவெடுக்க தொடங்கினார்.
தற்போது அவரது மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளரான அரசியல்வாதியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸி ஆனந்த் சினிமாவை பொறுத்தவரை அவரது 100 கோடி சம்பள கனவை நிறைவேற்றிய மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார் என்கிற வட்டத்திற்குள் பயணித்து வருகிறார்.
நெஞ்சில் குடியிருக்கும்
நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொல்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு உதயநிதிக்கான வாழ்த்து செய்தி, மதத்தை வைத்து தன்னை விமர்சிக்கும் அரசியல்வாதிகளுக்கான பதில், தனது சக போட்டியாளர் அஜீத்குமார் என நுட்பமான அரசியல் பேசியுள்ளார் விஜய்.
இந்த நுட்பம் எல்லாம் அவரை கண்மூடித்தனமாக ஆராதித்து பின்தொடரும் ரசிகர் கூட்டத்திற்கு புரியாமல் இருக்கக் கூடும். ஆனால் தமிழக அரசியல் களத்தில், சினிமாவில் இதற்கான எதிர்வினை வரும் காலத்தில் இருக்கும் என்பதும் அதனை எதிர்கொள்ள ரசிகர் கூட்டம் தேவை என்பதால்தான் என் ரத்தத்தின் ரத்தங்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே போன்று,
“என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற விளிமொழியை ஏற்கனவே அறிமுகப்படுத்தி பிகில் படத்தில் பாடலாகவும் வைத்துவிட்ட விஜய், இப்போது தனது செல்ஃபி வீடியோவில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டாக்கை போட்டு அதை தீவிரப்படுத்தியிருக்கிறார்.
தனது வெளிப்படையான நேரடியான தொழில் போட்டியாளர் அஜித் குமார், தனது தொழிலுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி தருவதாக கருதப்படும் உதயநிதி, தன்னை வெளிப்படையாக அரசியல் ரீதியாக விமர்சிக்கும் பாஜக என மூன்று பேருக்கும் மூன்று மெசேஜ்களை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார் விஜய்.
-இராமானுஜம்
விமர்சித்த ரசிகர்: அஸ்வின் பதிலடி!
ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்து: லிப்ட் கொடுத்த எம்.எல்.ஏ