அதிமுகவில் இடமில்லை: 3 பேருக்கு மெசேஜ் சொன்ன ஜெயக்குமார்

அரசியல்

“சசிகலா உள்ளிட்ட மூவர் தனியாக வந்தாலும் அணியாக வந்தாலும் அதிமுகவில் இடமில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியை முன்னெடுக்க சசிகலா யார்? அவருக்கும், அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்கும் பணியை வேண்டுமானால் சசிகலா செய்யட்டும். ஆடு நனைகிறதே என்று ஓணாய் அழக்கூடாது. அதிமுகவில் இன்று எந்த பிரச்சினையும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இன்று எழுச்சியாக போய்க் கொண்டிருக்கிறது. சசிகலாவின் கருத்தை நிச்சயமாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர் சொல்வது தேவையில்லாத கருத்து. அது எள்ளி நகையாடக் கூடிய கருத்தாகத்தான் இருக்க முடியும். அதிமுகவில் சண்டையும் இல்லை, ஒன்றும் இல்லை. சிலர் வெளியே போனார்கள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அணியாக வந்தாலும் தனியாக வந்தாலும் அதிமுகவில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களை கட்சியிலும், கூட்டணியிலும் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கும் இடங்களைத்தான் மற்றவர்கள் பெற முடியும். எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க வேலைகளை தொடங்கி விட்டோம். திமுக ஆட்சி மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி இருக்கிறது. அந்த அதிருப்தியையும், ஜெயலலிதாவின் திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறோம்.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாம் என்கின்றனர். இப்போது ஏன் பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ரூ.1000 கொடுக்கிறார்கள்” என்றவரிடம், ”திமுக அரசுதான் கரும்பை கொள்முதல் செய்து கொடுக்கவில்லை. அதிமுகவாவது கொள்முதல் செய்து கொடுக்கலாமா” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ”அதிமுக கட்சி சார்பில் இரண்டு கோடி பேருக்குக் கொடுக்க முடியாது. ஆனால், குறுகிய அளவே செய்ய முடியும். அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் மூலம் இதை ஏற்பாடு செய்ய முடியும். ஆனால், இதை ஏன் அரசாங்கம் கொள்முதல் செய்யவில்லை என்பதுதான் எங்களுடைய கேள்வி” எனப் பதிலளித்தார்.

ஜெயலலிதாவின் வெளிநாட்டுச் சிகிச்சை குறித்து சசிகலா அளித்த பதிலுக்கு விளக்கமளித்த ஜெயக்குமார், ”சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஜெயலலிதா வெளிநாட்டு மருத்துவச் சிகிச்சை குறித்து ஏன் சொல்லவில்லை. தவிர ஆஞ்சியோவுக்கு ஜெயலலிதாவே ஒப்புக்கொண்டதாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் உள்ளது. அப்படி எனில், ஏன் அதைச் செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.

ஜெ.பிரகாஷ்

சபரிமலை தரிசனம்: 50 அடி பள்ளத்தில் விழுந்து 8 பக்தர்கள் பலி

தமிழிசை மூவர் மண்டபம்: மின்னம்பலம் கட்டுரை- முதல்வர் எடுத்த ஆக்‌ஷன்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *