பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் ட்ரோன் கேமரா பறக்கவிட்ட மூன்று பேரை குஜராத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், நேற்று (நவம்பர் 24) பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா பகுதியில் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்குபெறுவதால், அகமதாபாத் மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
பேரணி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அந்த பகுதியில் ட்ரோன் கேமரா ஒன்று பறந்துள்ளது. அதனை காவல்துறை அதிகாரிகள் நோட்டமிட்டு உடனடியாக கைப்பற்றினர்.
போலீசார் விசாரணையில், ட்ரோன் பறக்கவிட்ட நிக்குல், ராகேஷ், ராஜேஷ் குமார் ஆகிய மூவரை குஜராத் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பேரணியில் மக்கள் கூட்டத்தை படம்பிடிக்கவே ட்ரோன் கேமரா பயன்படுத்தினோம் என்று தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 188-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் ட்ரோன் கேமரா பறந்தது, பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
செல்வம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி தாளாளர் கைது!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!