Speaker appavu accuses ED

’என்னையும் மிரட்டினார்கள்’- ED மீது சபாநாயகர் அப்பாவு பகீர் புகார்!

அரசியல்

மத்திய அரசின் அமைப்புகளுடைய இடைத்தரகர்கள் கடந்த 3 மாதங்களாக செல்போன் மூலம் மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். Speaker appavu accuses ED

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று (டிசம்பர் 1) கைது செய்தனர். அவரிடம் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக இடைத்தரகர்கள் தன்னை மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று (டிசம்பர் 2)  செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற மத்திய அரசினுடைய அமைப்புகள், மத்திய அரசின் மனநிலையைத் தெரிந்து கொண்டு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் இருக்கின்ற அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து அவர்களிடம் உங்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லி வைத்துள்ளேன் என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்களாக பல பேரை வைத்துள்ளார்கள்.

குறிப்பாக அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக இடைத்தரகர்களை வைத்துள்ளார்கள். இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டுவது போன்று பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிவிடுகிறார்கள்.

அதை தான் இப்போதும் செய்துள்ளார்கள். முதலில் அன்பாக பேசுவது, பின்னர் மிரட்டுவது போல பேசி மூன்றாவதாக சமாதானமாகப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் பணியவில்லை என்றால் அந்த நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது போன்ற செயல்கள் நடப்பதாகப் பல பேர் சொல்கிறார்கள்.

என்னிடம் கூட கடந்த 3 மாதமாக ஒரு சிலர் பேசிக் கொண்டே இருந்தார்கள். நான் அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. முதல் 2 முறை பார்த்தேன். மூன்றாவது முறை வரும் போது, தம்பி என்கிட்ட இந்த வேலையெல்லாம் வேண்டாம். நான் சரியாக தான் இருக்கிறேன். என்ன வந்தாலும் நான் பார்த்துக் கொள்வேன். ஏனென்றால் நான் விவசாயம் மட்டும் தான் செய்கிறேன். வேறு தொழிலே செய்யவில்லை என்று சொன்னேன். என்னிடமே மிரட்டுகிறார்கள் என்றால், இதை தானே எல்லோரிடமும் செய்வார்கள் என்று அனுபவப்பூர்வமாகத் தான் இதை சொல்கிறேன்.

இது தான் நாடு முழுவதும் நடக்கிறது. தமிழ்நாட்டில் காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதால் சரியான நபரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர். இதை வேண்டுமென்றே செய்தார்கள் என்று யாருமே சொல்ல முடியாது. கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

என்னை தொடர்பு கொண்டவர்கள், மத்திய அரசு உங்களுக்கு ஏதாவது பிரச்சனை கொடுக்க சொல்லி இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்கள் முடிந்தால் கொஞ்ச நாள் ஊரை விட்டே போய்விடுங்கள். தொலைபேசி எண்ணை மாற்றிவிடுங்கள் என்றெல்லாம் சொன்னார்கள். நான் ஆரம்பத்தில் இருந்தே இந்த செல்போன் எண்ணைத் தான் பயன்படுத்துகிறேன். நான் செல்போன் எண்ணையும் மாற்றப்போவதில்லை. ஊரை விட்டும் போகப்போவதில்லை என்று சொல்லிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘ஸ்டாலின் வலையில் சிக்கிய இ.டி. அமித்ஷாவை அதிரவைத்த திண்டுக்கல் ஆபரேஷன்’ என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில்… ‘தமிழ்நாட்டு அமைச்சர்களிடமே அமலாக்கத்துறையினர் தொடர்பு  கொண்டு,  அவர்கள் மீதான வழக்குகளில் தீவிரம் காட்டாமல் இருக்க பேரம் பேசினார்கள். சில அமைச்சர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு சென்று குறிப்பிட்ட சில இ.டி. அதிகாரிகளுக்கு பணமும் கொடுத்திருக்கிறார்கள்’ என்று வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் சபாநாயகர் அப்பாவுவே  தானும் மிரட்டப்பட்டதை பகிரங்கமாக வெளியே சொல்லியிருக்கிறார்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

“அனிமல்” ரன்பீர் கபூரின் வசூல் வேட்டை: முதல் நாளே இத்தனை கோடியா?

அமலாக்கத்துறை அதிகாரி கைது: அண்ணாமலை ரியாக்‌ஷன்!

Speaker appavu accuses ED

+1
1
+1
1
+1
0
+1
5
+1
1
+1
0
+1
0

Comments are closed.