இந்தியா கூட்டணியில் இருந்து விலகாவிட்டால் அரவிந்த் கெஜ்ரிவால் 3 அல்லது 4 தினங்களில் கைது செய்யப்படுவார் என மிரட்டல் வருவதாக டெல்லி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இதில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இடம் பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் -ஆம் ஆத்மி இணைந்து போட்டியிடவுள்ளன. இரு கட்சியினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், டெல்லியில் மொத்தமுள்ள 7 இடங்களில் காங்கிரசுக்கு 3 இடங்கள், ஆம் ஆத்மி கட்சி மீதமுள்ள 4 இடங்களில் போட்டியிட இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருந்து விலாகாவிட்டால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என பாஜக தரப்பில் இருந்து மிரட்டல் வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.
இன்று (பிப்ரவரி 22) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான கூட்டணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என செய்திகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகவில்லை என்றால், அடுத்த இரண்டு நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நோட்டீஸ் வரும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி-காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு செய்தால், அடுத்த மூன்று நான்கு நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார்.
சனி அல்லது திங்களன்று CrPC Section 41 (அ) படி அவரை சிபிஐ கைது செய்யும் என கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
அதேசமயம், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7ஆவது முறையாக சம்மன் அனுப்பியிருக்கிறது.
முன்னதாக அமலாக்கத் துறை அனுப்பிய 6 சம்மன்களை கெஜ்ரிவால் சட்டவிரோதமானது என கூறி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சிங்கத்துக்கு பேரும், சோறும்: அப்டேட் குமாரு
GOAT: வெங்கட் பிரபு அளித்த சர்ப்ரைஸ்!