எடப்பாடி உயிருக்கு அச்சுறுத்தல் : சேலத்திலிருந்து டிஜிபிக்கு வந்த மனு!

அரசியல்

எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்களுடன் சந்திப்பு

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமான பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக தொண்டர்களை சந்தித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தற்போது வரை 5 மாவட்டங்களில் அவர் சுற்றுப் பயணத்தை முடித்துள்ளார். ஏராளமான தொண்டர்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

அடிக்கடி மோதல்

இப்படி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தொண்டர்களை சந்திக்கும்போதே இருதரப்பு ஆதரவாளர்களும் அடிக்கடி மோதிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. இந்தநிலையில் பழனிசாமியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு தமிழக அரசு வேண்டுமென்றே பாதுகாப்பு தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

டிஜிபி-யிடம் புகார் மனு

இதைத்தொடர்ந்து சேலத்தை சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் டிஜிபி அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்டு 15ஆம் தேதிக்கு பிறகு தென் மாவட்டங்களில்  சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் இந்த மாவட்டங்களில் தொண்டர்களை சந்திக்கும்போது  கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களாலும் மற்ற சமூக விரோதிகளாலும் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

முன்னாள் முதல் அமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அரசு தரப்பில் இருந்து போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

எனவே அவரது பாதுகாப்பை அதிகரித்து உச்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மணிகண்டன் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கலை.ரா

காவியிலிருந்து மூவர்ணக் கொடிக்கு மாறிய ஆர்எஸ்எஸ்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *