threat to dmk government mk stalin

ஆட்சிக்கு மிரட்டல்… -ஸ்டாலின் கூறிய ஃபிளாஷ்பேக்!

அரசியல்

பூந்தமல்லி  சட்டமன்ற உறுப்பினரும்  மாநில ஆதி திராவிட நலக் குழுச் செயலாளருமான ஆ. கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழா இன்று ( நவம்பர் 1) சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

கிருஷ்ணசாமியின் மகள் டாக்டர் தாரணி, டாக்டர் பரத் கௌசிக் ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,

“நம்முடைய கிருஷ்ணசாமி நன்றியுரை ஆற்றியபோது தனது தந்தை ஆதி சதாசிவம் பற்றி நினைவுகூர்ந்தார். எமர்ஜென்சியை நாம் சந்தித்தபோது, தலைவர் கலைஞர்அவர்களுக்கு தூதுவர்கள் வருகிறார்கள். அம்மையார் இந்திரா காந்தி கொண்டு வந்திருக்கிற எமர்ஜென்சியை நீங்கள் எதிர்க்கக் கூடாது. ஆதரிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, ஆனால் எதிர்க்கக் கூடாது.

அப்படி செய்தால் உங்கள் ஆட்சி சில ஆண்டுகளுக்கு தொடரும். இல்லையென்றால் கலைக்கப்படும் என்ற இந்த செய்தியை கலைஞரிடத்திலே கோபாலபுரத்துக்கு வந்து சில தூதுவர்கள் சொன்னார்கள். அப்போதெல்லாம் நாங்கள் அதாவது நான், அண்ணன், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரெல்லாம்  கலைஞர் பக்கத்திலே இருந்தோம்.

அப்போது கலைஞர் சொன்னார்,  “ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக ஆட்சி அல்ல… எங்கள் உயிரே போனாலும் இதற்கு சம்மதிக்க மாட்டோம்’ என்று கலைஞர் சொல்லியனுப்பினார். இது வரலாறு. அவ்வாறு சொல்லி அனுப்பிய மறுநாள் கடற்கரையில் ஒரு பெருங் கூட்டத்தைத் திரட்டி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார்.

‘அம்மையார் இந்திராகாந்தி அவர்களே… எமர்ஜென்சியை உடனே ரத்து செய்ய வேண்டும். மிசா சட்டத்தின் கீழ் இந்தியாவின் பல தலைவர்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்று கலைஞர் தீர்மானத்தை முன் மொழிய அதை கூடியிருந்த கூட்டம் வழிமொழிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது நடந்த அடுத்த வினாடியே தமிழ்நாட்டில் நடந்து வந்த திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது. பல பேர் கைது செய்யப்படுகிறார்கள். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்த சூழ்நிலையிலே திமுகவின் கறுப்பு சிவப்பு வேட்டியை கட்ட கூட சிலர் பயந்தார்கள். கறுப்பு சிவப்பு வேட்டி கட்டியிருந்தால் கைது என்பதால்தான் அந்த பயம்.

அந்த காலகட்டத்திலே கிருஷ்ணசாமியின் தந்தை ஆதி சதாசிவம் துணிச்சலோடு கறுப்பு சிவப்பு துண்டை கழுத்திலே போட்டுக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று எமர்ஜென்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார். அதன் பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதான் வரலாறு.

அப்போது கிருஷ்ணசாமிக்கு வயது 10. அந்த சிறு வயதிலேயே  தந்தை வழியாக திமுக மீது அவருக்கு பற்று வந்தது. ஈடுபாடு வந்தது. தந்தை வழியிலே கிருஷ்ணசாமி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு திமுக கிளைக் கழக இளைஞரணிச் செயலாளராக பணியைத் தொடங்கினார். சட்டக் கல்லூரி மாணவரணி, வழக்கறிஞரணி, நாடாளுமன்ற உறுப்பினராக பணி, ஆதி திராவிட நலத்துறை பணி என்று மிளிர்ந்து வருகிறார்” என்று கூறிய ஸ்டாலின் நடப்பு விவகாரத்துக்கு வந்தார்.

“இன்றைக்கு நாட்டின் நிலைமை உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் சூழல் அமைந்திருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி தனக்கு எதிராக யார் எந்த கருத்தை சொன்னாலும் அவர்களை மிரட்டுவது, ஐ.டி., அமலாக்கத்துறை மூலம் மிரட்டுவது, இன்னும் சொல்லப் போனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் போனை ஹேக் செய்கிறார்கள்.

இப்போது ஆப்பிள் நிறுவனமே எதிர்க்கட்சித் தலைவர்களின் போன் ஹேக் செய்யப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறது. இந்த செய்தி வந்ததுமே ஒன்றிய அமைச்சர் இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறுகிறார். இது என்ன கேலிக் கூத்து?

அவர்களுக்கு இந்தியா கூட்டணியை பார்த்து தோல்வி பயம் வந்துவிட்டது. இங்கேயும் இந்தியா கூட்டணி அமர்ந்திருக்கிறோம். இன்று அவர்கள் எதிர்பாராத விதமாக மோடி ஆட்சியின் அநியாயங்களை, அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

விரைவில் நடக்க இருக்கும் ஐந்து மாநிலத் தேர்தலில் பிஜேபி தோல்வியைத் தழுவும் என்ற தகவல் நமக்கு வந்துகொண்டிருக்கிறது. அந்த பயத்தால்தான் அதனால்தான் அவர்கள் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார்கள். அதனால் நாட்டைக் காப்பாற்றுவதற்கு இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

திருமண விழாவில் திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயாலளரான அமைச்சர் கே.என்.நேரு, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை,  அமைச்சர் உதயநிதி,  முஸ்லிம் லீக் தலைவர்  காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்  உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

‘தங்கலான்’ டீசர்: ரத்தமாக தெறிக்கும் தங்கம்!

அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *