திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்திற்கு சாலைமார்க்கமாக எடுத்து செல்லப்படும் உம்மன் சாண்டியின் உடலுக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்களும், மாணவர்களும், பொதுமக்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று அதிகாலை 4.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது மறைவை அடுத்து பெங்களூருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் தங்களது உருக்கமான இரங்கல் செய்தியை வெளியிட்டனர். அதுபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று பிற்பகல் பெங்களூரிலிருந்து அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் உம்மன் சாண்டியின் உடல் வைக்கப்பட்ட தாழ்தளப் பேருந்து திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை 7:20 மணியளவில் புறப்பட்டது.
அங்கிருந்து கேரளாவில் காங்கிரஸ் கோட்டை எனப்படும் கோட்டயத்தில் உள்ள அவரது சொந்த ஊரான புதுப்பள்ளிக்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்படுகிறது.
இதனையடுத்து வழிநெடுகிலும் காங்கிரஸ் தொண்டர்களும், மாணவர்களும், பொதுமக்களும் உம்மன் சாண்டியின் உடலுக்கு கண்ணீருடன் மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
VIDEO | Supporters in large numbers pay homage to Congress stalwart and former Kerala CM Oommen Chandy, who passed away in Bengaluru in the early hours of Tuesday.
His body is being taken by road to his hometown of Puthuppally in Kottayam district. The funeral would be held… pic.twitter.com/cq5z7Ls8go
— Press Trust of India (@PTI_News) July 19, 2023
மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசாரின் வாகனங்களும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள பேருந்தின் பின்னால் அணிவகுத்து செல்கின்றன.
உம்மன் சாண்டி உடல் செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருவதால் இறுதி ஊர்வலம் கடந்த 4 மணி நேரத்தில் 12 கி.மீ தூரம் மட்டுமே க்டந்துள்ளது தற்போதைய நிலவரப்படி இரவு 11 மணிக்கு மேல் உம்மன் சாண்டியின் உடல் கோட்டயத்தை அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதுபள்ளியில் உள்ள உம்மன் சாண்டியின் இல்லத்திற்கு கொண்டுவரப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக கோட்டயம் திருநக்கரா மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைதொடர்ந்து உம்மன் சாண்டியின் இறுதி சடங்கு புதுப்பள்ளியில் உள்ள புனித ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
கூடுதலாக ரூ.10 வசூலித்தால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!
அமைச்சர் அனிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தலையிடும் ED: இன்று முடிவு தெரியும்!