பாஜக முன்னாள் தேசிய தலைவர் ஹெச். ராஜா வருகைக்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகத்தை தள்ளி வைத்ததாக பக்தர்கள் மத்தியில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் டிசம்பர் 28ஆம் தேதி துவங்கியது. ஜனவரி 5ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தேர் திருவிழாவுக்கு பின்னர் நடராஜ சுவாமிக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெறும்.
சிதம்பரம் கோவிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா மஹாபிஷேகமும், ஆனி மாத திருமஞ்சன மஹாபிஷேகமும் புகழ் பெற்றவை. இந்த இரண்டு விழாவின் போதுதான் நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் வெளியே வந்து ஆயிரம் கால் மண்டபத்தில் காட்சி அளிப்பது தனிச் சிறப்பு.
ஜனவரி 5ஆம் தேதி தேரோட்டம் முடிந்து ஜனவரி 6ஆம் தேதி மஹாபிஷேகம் வழக்கமாக அதிகாலை 1.00 மணிக்கு துவங்கி காலை 5.30 மணிக்கு முடிந்துவிடும். அதனால் மஹாபிஷேகம் தரிசனத்தைக் காண நேற்று முன் தினம் இரவு 7.30 மணி முதலே பக்தர்கள் இடம் பிடிக்கத் திரண்டுவிட்டனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து விட்டனர்.

நள்ளிரவு 1 மணி, 2 மணி, 3 மணி என கடந்தது. ஆனால் அபிஷேகம் ஆரம்பிக்கவில்லை. பக்தர்கள் சத்தம் போடத் துவங்கினார்கள். மஹாபிஷேகத்தை காண காத்திருந்த பக்தர்கள்… ‘ஏன் லேட்…. ஏன் லேட்?’ என்று தீட்சிதர்களிடம் சென்று கேட்டார்கள். அப்போது சில தீட்சிதர்கள், ‘யாரோ பிஜேபி விஐபி வர்றாளாம்… அவாளுக்காகத்தான் காத்திருக்கோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்த விஐபி யார் என்று காலை 4.30 மணிக்குத்தான் பக்தர்களுக்குத் தெரிந்தது. அவர்தான் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.
அவரும் மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியும் கோயிலுக்குள் வந்த பிறகுதான் மணியோசை ஒலித்தது. அதன் பின் ராஜாவும், சரஸ்வதியும் வந்து அமர்ந்த பிறகு மஹாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு காலை 9. 15க்கே முடிந்தது.
நள்ளிரவு ஒரு மணிக்கு மஹாபிஷேகம் தொடங்கி அதிகாலை 5.30 க்கு முடிய வேண்டும். ஆனால், பாஜகவின் இரு பிரமுகர்களுக்காக நடராஜ சுவாமியே காத்திருந்து மூன்று மணி நேரம் தாமதமாக மஹாபிஷேகம் தொடங்கி தாமதமாகவே முடிந்தது.
‘இப்படி பத்தாயிரம் பக்தர்கள் திரண்டிருக்கறத பத்தி கவலைப்படாம அவங்க ரெண்டு பேருக்காக மஹாபிஷேகத்தை லேட் பண்ணியிருக்காங்க. இதுதான் சாமிக்கு அவங்க கொடுக்குற மரியாதையா? இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இருந்தா இப்படி நடந்திருக்குமா? ’ என்கிறார்கள் திரண்டிருந்த பக்தர்கள்.
வணங்காமுடி
Comments are closed.