|

கோட்சே வழி வந்தவர்களுக்கு காந்தியை பற்றி தெரியாது… மோடிக்கு ராகுல் பதிலடி!

நாதுராம் கோட்சேவின் வழியைப் பின்பற்றுபவர்களால் காந்தியைப் புரிந்து கொள்ள முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இதில், அவர் பேசும் பேச்சுகள் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

இந்தநிலையில் ஏபிபி நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி, காந்தியை பற்றி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

“உலகின் மிகப் பெரிய ஆன்மா காந்தி. இந்த 75 ஆண்டுகளில் காந்தியை பற்றி உலகிற்கு தெரிவித்திருக்க வேண்டியது நம் பொறுப்பு தானே… அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னியுங்கள்… 1982ஆம் ஆண்டு காந்தி படம் வெளியாவதற்கு முன்னதாக அவரை பற்றி இந்த உலகம் அறிந்திருக்கவில்லை. இந்த படம் எடுக்கப்பட்ட போதுதான் முதல் முறையாக காந்தியை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் உலகில் ஏற்பட்டது.

மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருக்கிறது. அவர்களை காட்டிலும் காந்தி குறைந்தவர் அல்ல. உலகம் முழுவதும் பயணம் செய்ததை வைத்து இதை சொல்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “காந்தி இந்த உலகத்திற்கே உத்வேகமாக இருந்தவர். மார்ட்டின் லூதர் கிங் , நெல்சன் மண்டேலா, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என அனைவரும் காந்தியால் ஈர்க்கப்பட்டவர்கள். கோடிக்கணக்கான இந்திய மக்கள் காந்தியின் அகிம்சை பாதையை பின்பற்றுகிறார்கள்.

உலகம் முழுவதற்கும் இருளை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி. அநீதிக்கு எதிராக போராட பலவீனமாக இருந்தவர்களுக்கும் தைரியம் கொடுத்தவர் காந்தி. அவருக்கு எந்தச் சான்றிதழும் தேவையில்லை.

உலகத்தை பல்வேறு கோணங்களில் பிரித்துப் பார்ப்பவர்களால் காந்தியை புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் கோட்சேவை மட்டுமே புரிந்துகொள்ள முடியும்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னதாக ராகுல் காந்தி, Entire Political Science படிக்கும் மாணவர்தான் காந்தியை சினிமா பார்த்து தெரிந்து கொள்வார் என கிண்டல் செய்யும் விதமாக தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி, Entire Political Science என்ற பட்டப் படிப்பு படித்ததாக ஒரு சர்ச்சை இருக்கும் நிலையில் அதை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதுபோன்று காந்தியின் பேரன் துஷார் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ஆர்எஸ்எஸ்ஸின் நாதுராம் கோட்சே காந்தியை கொன்ற போது, அதாவது ‘காந்தி’ படம் உருவாவதற்கு முன்பே, உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் அஞ்சலிகளும், இரங்கல்களும் குவிந்தன. படிப்பறிவில்லாத பிரதமர் மோடிக்கு தெரிவிப்பதற்காக இதை சொல்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Norway Chess 2024: கார்ல்சனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்த பிரக்ஞானந்தா!

Share Market : 4ஆவது நாளாக குறைந்த சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts