தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சி மன்றத் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் இன்று (ஜூன் 13) வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
அப்போது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி ஊராட்சியிலும் தேர்தல் நடைபெற்றது. 3,088 வாக்குகள் கொண்ட காயாமொழி ஊராட்சி தேர்தலில் ராஜேஸ்வரன், முரளி மனோகர் உள்ளிட்ட 8 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவில் முரளி மனோகர் 1,070 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், ராஜேஸ்வரன் அவரை விட கூடுதலாக ஒரு வாக்கு அதாவது 1,071 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முரளி மனோகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம், காயாமொழி ஊராட்சி மன்றத்திற்கான மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அன்றோ தலைமையில் இன்று (ஜூன் 13) மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற மறுவாக்கு எண்ணிக்கையில் ராஜேஸ்வரன் 1,069 வாக்குகளும், முரளி மனோகர் 1,068 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவுகளின்படி, காயாமொழி ஊராட்சித் தலைவராக 2வது முறையாக ஒரு வாக்கு வித்தியாசத்தில் ராஜேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐஸ்கிரீமில் மனித விரல்… ஷாக்கான டாக்டர்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியா?: அன்புமணி பதில்!