தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படுகொலை சம்பவம் நடப்பதற்கு முக்கியமான காரணம் ஸ்டெர்லைட் நிறுவனத்தினுடைய நேரடி தலையீடு தான் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அறிக்கை குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (அக்டோபர் 21) மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அருணா ஜெகதீசன் ஆணையத்தில் குற்றம் இழைத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழக வரலாற்றில் கரும்புள்ளி நிகழ்வாக நிகழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்திருக்கிறார்கள் என்பது தான் அருணா ஜெகதீசன் அறிக்கையின் சாராம்சமாக உள்ளது.
அதே வேளையில், இந்த படுகொலை நடப்பதற்கு முக்கியமான காரணமாக இருப்பது ஸ்டெர்லைட் நிறுவனத்தினுடைய நேரடி தலையீடு என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கிறோம்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிறுவனம் இந்த பச்சை படுகொலையில் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை அறிக்கை கொடுத்திருப்பது ஏமாற்றத்திற்குரிய ஒன்று.
மே 22-ஆம் தேதி போராட்டத்தை அறிவித்தவுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள்.
ஒரு தனியார் நிறுவனம், ஒரு மாவட்ட நிர்வாகம் எதை செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க முயற்சி செய்வது ஒரு ஆட்சி அமைப்பில் நேரடியாக தலையிடுவதற்கு சமமாகும்.
தூத்துக்குடி பகுதியில் 144 தடை உத்தரவை கொண்டு வரலாம் என்ற தீர்ப்பை ஸ்டெர்லைட் நிர்வாகம் மதுரை உயர்நீதிமன்றத்தில் பெறுகிறார்கள். இப்படியான ஒரு வலிமை வாய்ந்த நிறுவனம் எப்படி படுகொலையில் சம்பந்தப்படாமல் இருக்கும்?
ஸ்டெர்லைட் வளாகம் அமைந்திருக்கக்கூடிய பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் நெருக்கமாக இருந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். தூத்துக்குடி பகுதி மக்களும் அவரை குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அவருடைய மனைவியும் காவல்துறையில் பணியாற்றுகிறார்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற போது, அவர் சிறப்பு கட்டுப்பாட்டு அறை தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கால அளவை மீறி கட்டுப்பாட்டு அறையிலே அமர்ந்து பதிவுகளை மேற்கொண்டு, உண்மையான தகவல்கள் வெளிவராமல் செய்திருக்கிறார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் கடைமட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் முன்முடிவோடு இருந்ததை இந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
பாஜக அரசு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் முழுக்க முழுக்க பின்னால் இருந்து செயல்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் லண்டன் சென்று மோடியை சந்தித்துள்ளார்.
மோடி இங்கிலாந்து பயணத்தின் போது, அவருக்கு விளம்பரம் செய்தது வேதாந்தா நிறுவனம் தான். மோடி அரசும், எடப்பாடி அரசும் அதிகாரிகளை வைத்து பச்சைப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்
தமிழக மீனவர்கள் சுடப்பட்டது கண்டனத்துக்குரியது: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!