ராஜன் குறை
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சினை அவரை தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்ட படுகொலைக்கு யாரும் பொறுப்பாக்குகிறார்கள் என்பதல்ல. உண்மையில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை யாருமே நம்பவில்லை என்பதுதான்.
அவரைத் தவிர எந்த ஒரு ஆளுமையுள்ள அரசியல் தலைவர் முதல்வராக இருந்திருந்தாலும் அவர் மீதான மிகப்பெரிய குற்றச்சாட்டாக, அவப்பெயராக அந்த சம்பவம் மாறியிருக்கும். எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளை போல சிரித்தபடியே “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டேன்” என்று கூறியபோது யாரும் அவர் பொய் சொல்கிறார் என்று கொந்தளிக்கவில்லை.
உண்மையிலேயே அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரிந்திருக்காது என்றுதான் அன்றும் நினைத்தார்கள், இன்றும் கூட நினைக்கிறார்கள். அவர் ஒரு பொம்மை முதல்வர்; அவருக்கு ஆளும் திறனெல்லாம் கிடையாது என்று பலரும் நினைப்பதால் அவரைப்போய் இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு, ஜாலியன் வாலா பாக் படுகொலை போன்ற சம்பவத்திற்கு பொறுப்பாக்க முடியுமா, பாவம் பழனிசாமி, என்றுதான் நினைக்கிறார்கள்.
கந்தசாமி படத்தில் வடிவேலுவை கைது செய்து கூட்டிப்போய் விசாரிப்பதுபோல அந்த அளவுக்கு பழனிசாமி ஒர்த் இல்லை என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக ஃபிரண்ட்லைன் பத்திரிகையில் வெளியான நீதியரசர் அருணா ஜெகதீசனின் தூத்துக்குடி படுகொலை விசாரணை அறிக்கை தொடர்பான விவாதங்களில் கூட யாரும் எடப்பாடி பழனிசாமிதான் அப்போது முதல்வர் என்பதையோ, அவர் அந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையோ வலியுறுத்தவில்லை. உண்மையில் யார் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்திருப்பார்கள் என்றுதான் யூகிக்க முயல்கிறார்கள்.
பார்க்கப்போனால் இந்த நிலை, பழனிசாமிதான் பொறுப்பாளி என்று ஒருவர் குற்றம்சாட்டுவதை விட மிக மோசமானது. அரசியலில் ஒருவர் ஹீரோவாகவும் நினைக்கப்படலாம், வில்லனாகவும் நினைக்கப்படலாம். ஏனெனில் ஒரு தரப்பு ஹீரோ என்று நினைத்தால், மற்றொரு தரப்பு வில்லன் என்று நினைக்கும். கலைஞர், ஸ்டாலின் போன்றவர்கள் முற்போக்காளர்களுக்கு ஹீரோ என்றால், பிற்போக்காளர்களுக்கு வில்லன். மோடி, அமித் ஷா முற்போக்காளர்களுக்கு வில்லன் என்றால், சனாதன பிற்போக்காளர்களுக்கு ஹீரோக்கள்.
ஆனால் டம்மி பீஸ் என்று நினைக்கப்படுவது அரசியலில் முழுமையான தோல்வி என்றே கருதப்படும். இருந்தபோதும் பழனிசாமியை வைத்து ஆதாயம் பார்க்க நினைப்பவர்கள் அவரை தூண்டிவிடுவதை நிறுத்துவதாக இல்லை. தன் ஏழைப் பங்காளன் பிம்பத்தை முதலீடாகக் கொண்டு மாபெரும் மக்கள் ஆதரவைப் பெற்ற எம்.ஜி.ஆருக்கும், அவரது வாரிசாக இழப்பதற்கு எதுவுமில்லை என்ற துணிச்சலையும், வேறு சில கலாசார அனுகூலங்களையும் கொண்டு அரசியலில் காய் நகர்த்தி மக்களிடையே ஆதரவையும் பெற்ற ஜெயலலிதாவிற்கும் வாரிசாக எடப்பாடி பழனிசாமியை முன் நிறுத்திவிடலாம் என்று அவரை ஓயாமல் தூண்டி விடுகிறார்கள். ஊடகங்களும் சும்மா இருப்பதில்லை.
ஓ.பி.எஸ்-சை பாரதீய ஜனதா கட்சி ஆதரித்தால் எடப்பாடி பழனிச்சாமி பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து அரசியல் செய்வார் என்றெல்லாம் கூட யூகங்களை வெளியிடுகின்றன. பாரதீய ஜனதா கட்சி அவரை எதிர்த்தால், அவரும் எதிர்த்துத்தான் ஆகவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் எதிர்த்து “அரசியல்” செய்வார் என்று நினைப்பதுதான் பிரச்சினை. அவர் என்ன அரசியல் செய்வார்? அவருக்கு என்ன அரசியல் தெரியும்? அவர் என்றைக்கு அரசியல்வாதியாக இருந்தார்? என்பதெல்லாம் முக்கிய கேள்விகள்.
அந்த கேள்விகளுக்கான விடையை நாம் தூத்துக்குடி படுகொலையை வைத்தே ஆராய்ந்து புரிந்துகொள்ளலாம். இது ஏதோ அ.இ.அ.தி.மு.க தலைமைப் போட்டியில் எடப்பாடிக்கு எதிரான தரப்பினரை ஆதரிக்க மேற்கொள்ளும் விசாரணையல்ல. அவர்களில் யாரையுமே அரசியல் அறிந்தவர்கள் ஆதரிக்க முடியாது. நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்றால் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற பதவி எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதற்கு சிறிதும் தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி போன்ற மனிதர்கள் வந்தால் என்னவெல்லாம் நடக்கலாம் என்பதையும்தான்.
தூத்துக்குடி போராட்டத்தின் பின்னணி என்ன?
தூத்துக்குடி போராட்டம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவிய வேதாந்தா நிறுவனம் சாம்பியா முதல் ஆஸ்திரேலியா வரை உலகின் பல்வேறு நாடுகளிலும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. ஒரிஸாவில் பழங்குடியினர் வசிப்பிடங்களில் சுரங்கம் தோண்டுவதற்காக நிகழ்த்திய வன்முறைகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் கண்டிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் இந்த நிறுவனத்தில் வாங்கியிருந்த பங்குகளை இதன் நடவடிக்கைகளை கண்டித்து சர்ச் ஆஃப் இங்கிலாந்து விற்றுவிட்டது. தான் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஒரு பன்னாட்டு குழுமம் வேதாந்தா. அதன் தலைவர் அனில் அகர்வால். கடந்த முப்பதாண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்ட நிறுவனம் இது.
தூத்துக்குடியில் அது செம்பின் மூலக வடிவத்திலிருந்து செம்பை உருக்கியெடுக்கும் தொழிற்சாலையை நிறுவ முன்வந்தபோது அது மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகளை கவனமாக மேற்கொள்ளும் என்ற எண்ணத்தில்தான் யாரும் அனுமதி வழங்கியிருப்பார்கள். ஆனால் அது தன் வசதி கருதி மக்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே தொழிற்சாலையை அமைத்ததுடன் மாசு கட்டுப்பாட்டில் உரிய கவனம் செலுத்தவில்லை.
ஆங்கிலத்தில் காப்பர் ஸ்மெல்டிங்க் எனப்படும் செம்பினை அதன் மூலகத்திலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தத் தக்க உலோகமாக்குவதற்கு சல்ஃபைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப் படுகிறது. இதன் கழிவும், அந்த உயர் வெப்ப உலைகளிலிருந்து கசியும் வாயுவும் சுற்றுவட்டாரத்தில் உள்ள உயிரினங்களுக்கு, மனிதர்களுக்கு தீங்கு பயப்பவை.
நிலத்தடி நீரும் பாதிப்படையும். இதற்கான மாசு கட்டுப்பாடுகளை செய்வது சவாலானது, மிகுந்த செலவினை கோருவது என்பதால் வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் அக்கறைக் குறைவாகவே இருந்துள்ளது நிதர்சனம். மக்கள் இதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து போராடத் துவங்கியதும் பிரச்சினை கூர்மையடைந்தது.
ஆலை கட்டுவதற்கான அனுமதி 1994-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கியபோதே மக்கள் குழுக்கள் எதிர்ப்பை தெரிவித்தன. ஆலை செயல்படத் துவங்கியதிலிருந்தே ஆலைக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் தென்படத்துவங்கின. மக்கள் போராட்டங்கள் நிகழ்ந்தன. தேசிய பசுமை நல அமைப்பான நீரி அமைப்பு ஆலை சில அடிப்படை விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதை கூறியது.
பல்வேறு பாதிப்புகளின் காரணமாக 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு ஆலையை மூடச்சொன்னது. சென்னை உயர் நீதிமன்றமும் ஆலைக்கு தடை விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் ஆலை தொடர்ந்து செயல்பட நிபந்தனைகளுடன் அனுமதித்தது. மீண்டும் 2013-ஆம் ஆண்டு வாயுக்கசிவு நிகழ்ந்த வழக்கில் சரியானபடி மாசுகட்டுப்பாட்டினை செய்யாததற்காக உச்ச நீதிமன்றம் ஆலைக்கு நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் உற்பத்தியை தடை செய்யவில்லை.
இவ்வாறான நீண்ட போராட்ட வரலாற்றிற்குப்பின் ஸ்டெர்லைட் ஆலை மேலும் ஒரு உற்பத்தி நிலையத்தை நிறுவ முயன்ற போதுதான் 2018-ஆம் ஆண்டு பெரும் போராட்டம் துவங்கியது. போராட்டம் 100 நாட்களாக நடைபெற்றது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் போராடும் மக்களுக்கு ஆதரவாக அவர்களிடையே பேசினார்கள்.
கமலஹாசன் கூட சென்று பேசினார். அவ்வளவு தீவிரமான போராட்டத்தின் நூறாவது நாளில்தான் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஒரு பேரணியை நடத்த போராட்டக் குழு முடிவு செய்தது. கலெக்டர் மர்மமான முறையில் ஊரை விட்டு ஓடிப்போனார். ஒரு சில வருவாய் துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் யாருடைய தூண்டுதலிலோ வேண்டுமென்றே மக்களை கொன்று தீர்க்க முனைந்தனர். பதினாறு பேர் உயிரிழந்தனர். தூரத்திலிருந்து குறிபார்த்து கலைந்தோடும் மக்களின் பின்மண்டையில் சுட்ட விதம் ரத்தத்தை உறைய வைக்கிறது.
இதைப் படிக்கும் யாருக்குமே இந்த பிரச்சினையின் தீவிரம் புரியும். நூறு நாட்களாக நடக்கும் போராட்டத்தில் மக்களின் கொதி நிலை உயர்ந்திருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தெரியும். டில்லியிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே தூத்துக்குடியில் பிரச்சினை முற்றுகிறது, மக்கள் உடனடியாக அரசின் தலையீட்டை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
கூவாத்தூர் முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார்?
ஒரு சிறிய, நாம் நன்கறிந்த ஃபிளாஷ்பேக். தற்செயலாக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 2016 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த ஜெயலலிதா அந்த ஆண்டு டிசம்பர் மாதமே மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
ஜனவரி மாதம் ஜல்லிகட்டு தடையை நீக்கச்சொல்லி வரலாறு காணாத தன்னெழுச்சியான போராட்டம் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக மெரினா கடற்கரையிலும் நிகழ்ந்தது. ஒன்றிய அரசும் தனிச்சட்டம் இயற்றி தடையை நீக்கியது. இந்த சம்பவத்தினூடாக ஓ.பன்னீர்செல்வத்தின் மீது ஐயம் கொண்ட சசிகலா, ஜெயலலிதாவின் முப்பதாண்டுகால இணைபிரியா கூட்டாளியாக, அரசியல் பங்குதாரராக, ஓரளவு சூத்ரதாரியாகவும் விளங்கியவர்,
தானே முதல்வராக தீர்மானித்தார். ஓ.பன்னீர்செல்வம் பாரதீய ஜனதா கட்சி குருமூர்த்தியின் தூண்டுதலில் திடீரென கட்சியை பிளந்து தானே முதல்வராக நீடிக்க முயற்சித்தார். அப்போது சசிகலாவும், அவருக்கு துணையாக அவரது அக்காள் மகன் டி.டி.வி.தினகரனும் சட்ட மன்ற உறுப்பினர்களை ஓ.பி.எஸ்-பாஜக பிடியிலிருந்து காப்பாற்ற கூவாத்தூர் என்ற இடத்தில் ஒரு விடுதியில் தங்க வைத்திருந்தனர்.
ஓ.பி.எஸ் போதுமான ஆதரவை திரட்ட முடியாததால் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா-சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே பல மாதங்களுக்கு முன் எழுதி வைக்கப்பட்டு உறங்கிக் கொண்டிருந்த தீர்ப்பு திடீரென வழங்கப்பட்டு சசிகலா சிறை செல்ல நேர்ந்தது. அப்போது கூவாத்தூரில் சசிகலா தனக்குப் பதிலாக ஒரு நம்பகமான மனிதரை தேர்வு செய்ய முனைந்தார். சந்தர்ப்பவசமாக இதுவரை புலனாகாத காரணங்களால் அந்த தருணத்தில் தேர்வு செய்யப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அன்றைய தினம் வரை இப்படி ஒரு அமைச்சர் இருக்கிறார் என்பதே பெரும்பாலானோர் கவனத்திற்கு வந்ததில்லை.
எதற்காக இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது என்றால் ஏதோ மாவட்ட அளவில் பஞ்சாயத்து செய்துகொண்டு அமைச்சராக இருந்த ஒருவருக்கு முதல்வர் என்ற பதவியின் முக்கியத்துவம் என்ன என்பது புரியவில்லை என்ற உண்மையை சுட்டிக்காட்டத்தான். சேலம் மாவட்ட செயலாளரான அவருக்கு தூத்துக்குடி தொடர்பில்லாத ஒரு ஊர்தானே. அதனால்தான் அவரால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை, சாமானிய மக்கள் மீது அவர் பொறுப்பில் இருந்த காவல்துறை நிகழ்த்திய கொடூர தாக்குதலை “தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன்” என்று கூற முடிந்தது.
உண்மையில் அரசியல் தெரிந்த ஒரு மனிதராக இருந்தால், அவரது பொறுப்பை உணர்ந்திருந்தால் அந்த நூறு நாட்களுக்குள்ளாக மக்களிடம் பேசி ஒரு தாற்காலிக தீர்வை நோக்கி நகர்ந்திருக்க முடியும். அதைச் செய்யத்தான் அரசியல் தலைமை என்பது தேவைப்படுகிறது.
ஆனால் கூவாத்தூர் முதலமைச்சரோ தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் சொன்ன இடத்தில் கையெழுத்துப் போட்டால் தன் வேலை முடிந்தது என்று வாளாவிருந்தார். போலீஸின் கோர தாண்டவத்தை நியாயப்படுத்த ஆன்மீக நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என்று கூறினார். அப்படி “சமூக விரோதிகள்” உண்மையிலேயே புகுந்திருந்தால் அதை கண்காணிக்கத்தானே உளவுத்துறை இருக்கிறது? அது முதல்வரிடம்தானே அறிக்கையளிக்கும்?
மாநிலத்தில் நடப்பதற்கெல்லாம் முதல்வரா பொறுப்பு?
எடப்பாடி பழனிசாமியை தூத்துக்குடி படுகொலைக்கான பொறுப்பிலிருந்து விடுவிக்க நினைக்கும் சிலர் மாநிலத்தில் நடப்பதற்கெல்லாம் முதல்வரா பொறுப்பு என்று கேட்கிறார்கள். நிச்சயம் இல்லை. தமிழகம் போன்ற எட்டு கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் ஆங்காங்கே திடீரென பிரச்சினைகள் வெடிக்கத்தான் செய்யும்.
ஆனால் தூத்துக்குடி பிரச்சினை திடீரென வெடித்ததல்ல. அது வெகுகாலமாக நிகழ்ந்து கொண்டிருந்த முக்கியமான போராட்டம் என்பது மட்டுமல்லாமல், நூறு நாட்களாக ஒரு கொதி நிலையை நோக்கி சென்று கொண்டிருந்த போராட்டம். அதில் தலையிட்டு அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க முடியாவிட்டால் எதற்காக அரசியல்வாதிகள் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும்? பேசாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையே நாட்டை ஆளச்சொல்லி விடலாமே?
சரி, அப்படித்தான் ஒரு அசம்பாவிதம் எதிர்பாராவிதமாக நடந்துவிட்டது. ஒரு முதல்வருக்கு அழகு, தான் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிப்பதுதானே? பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதானே அரசியல்? எனக்கென்ன தெரியும் என்று ஒதுங்கிப்போக எதற்காக ஒரு அரசியல்வாதி? இந்தியாவின் தென் கோடியில் நிகழ்ந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகிய லால் பகதூர் சாஸ்திரியை அனைவரும் குறிப்பிடுவார்கள்.
அதுபோல தொடர்ந்து செய்வது சாத்தியமில்லைதான். ஆனால் அவர் அவ்வாறு செய்ததற்குக் காரணம் சுதந்திர இந்தியாவில் ஆட்சிக்கு வரும் அரசியல்வாதியின் பொறுப்பு என்ன என்பதை உணர்த்தத்தான்.
எடப்பாடி பழனிசாமி அந்த சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து இன்றுவரை தன்னுடைய பொறுப்பு என்ன என்று உணர்ந்து பேசியதாக நான் பார்க்கவில்லை. இப்படி ஒரு பொறுப்பற்ற மனிதர்தான் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர், தமிழகத்தில் முப்பது சதவீத வாக்குகளை பெறக்கூடிய ஒரு பெரிய கட்சியின் தலைவராக விளங்கத் துடிப்பவர் என்பது ஒரு அரசியல் விபரீதம் என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை. அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை முழுமையாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது மேலும் இந்த பிரச்சினையில் எத்தகைய தெளிவைத் தரப்போகிறது என்று பார்ப்போம்.
கட்டுரையாளர் குறிப்பு
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது! வளர்ந்து செழிக்கட்டும் இந்தியக் கூட்டாட்சி குடியரசு!
Ththukudi issue Annalis very correct good notes about Edapadi Palanisamy by Thiyagarajan