ராஜன் குறை
மக்களில் சிறு பகுதியினர் அரசின் மீது கடும் அதிருப்தி கொண்டு அதற்கெதிராக சதி செய்வார்கள் என்பது பொதுவான புரிதல். ஆனால், அரசு மக்களுக்கு எதிராக சதி செய்தது என்றால் என்ன பொருள்?
மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடுகள், முன்னெடுப்புகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை முன்னிட்டு போராடுகிறார்கள். இதனால் பெருமுதலீட்டிய நலன்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.
அரசு மக்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை தர முடிவு செய்கிறது. அதனால் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைத் தேர்வு செய்து அதில் போராடும் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு ஒரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்த முடிவு செய்கிறது. “நீங்கள் எடுத்ததெற்கெல்லாம் போராடினால், அரசு சுட்டுத் தள்ள தயங்காது; நாடு சுடுகாடாகப் போய்விடும்” என்று எச்சரிக்க விரும்புகிறது.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஒரு போராட்டம்தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம். அங்கே 2018 மே 22 அன்று நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 14 பேர் தான் எச்சரிக்கையின் உள்ளடக்கம். யாராவது பொது நலனுக்காக உங்களை போராட அழைத்து நீங்கள் சென்றால், நீங்கள் சுட்டுக்கொல்லப்படலாம். அரசு உங்கள் உயிருக்கு பொறுப்பேற்காது என்பதே எச்சரிக்கை.
இப்படிச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டா, அருணா ஜெகதீசன் அறிக்கையை இப்படி புரிந்துகொள்ள முடியுமா என்று கேள்விகள் எழும். அரசியல் சித்தாந்தத்தின் துணையில்லாமல் இதைப் புரிந்துகொள்ள முடியாது.
அரசு என்பது யார்?
சமகால அரசியல் தத்துவத்தில் இது மிகவும் சிக்கலான கேள்வி. நீங்கள் ஒரு கிராமத்தில் வசித்தால், உங்கள் கிராம நிர்வாக அதிகாரி, நீங்கள் எந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறீர்களோ அந்த காவல் நிலையத்தில் பணி புரியும் காவலர்கள், உதவி ஆய்வாளர், நீங்கள் எந்த நீதிமன்றத்தின் எல்லைக்குள் வருகிறீர்களோ அதில் பணிபுரியும் மாஜிஸ்டிரேட் ஆகிய அனைவரும் உங்களைப் பொறுத்தவரை அரசுதான். உங்கள் பஞ்சாயத்துத் தலைவர், உங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரும் அரசுதான்.
முதலில் சொன்னவர்களான அரசு ஊழியர்கள், அதிகாரிகள், காவல்துறை, நீதித்துறை சார்ந்தவர்கள் அடங்கியது அரசின் நிர்வாக இயந்திரம்: அதன் பெயர் சட்டத்தின் ஆட்சி.
இரண்டாவதாக சொன்ன மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி; மாநில சட்டமன்றம், அதன் உறுப்பினர்கள், அமைச்சரவை, முதலமைச்சர்; நாடாளுமன்றம், அதன் உறுப்பினர்கள், ஒன்றிய அமைச்சரவை, பிரதம அமைச்சர் ஆகியவர்களே அரசு இயந்திரத்தை இயக்குபவர்கள்: அதன் பெயர் மக்களாட்சி.
எந்த ஒரு சூழலிலும் மக்களாட்சியில் மக்களின் நிறைகுறைகள், அவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள், அவர்களுக்கு இழைக்கப்படும் தீமைகள் ஆகியவற்றுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் மக்கள் பிரதிநிதிகள்தான். ஏனெனில் அதிகாரிகளுக்கு உத்தரவு போடும் அதிகாரம் கொண்டவர்கள் அவர்கள்.
மக்களுக்கு நன்மைகள் செய்தால் அந்த விளம்பரங்களில் தங்கள் படத்தைப் போட்டுக்கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொட்டலத்தில் கூட முதல்வரின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டுவது, தடுப்பூசி சான்றிதழில் கூட பிரதமரின் படத்தைப் போடுவது என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று சொல்வது மக்களாட்சியின் முகத்தில் காரி உமிழ்வதற்கு ஒப்பாகும்.
நிர்வாக அதிகாரிகள், காவல்துறை, நீதித்துறை, சட்டம், விதிமுறைகள், மக்கள் பிரதிநிதிகள், கட்சிகள், தலைவர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர்கள், சட்ட திட்டங்கள், விதிமுறைகள் அனைத்தும் சேர்ந்த அருவமான அமைப்புதான் அரசு என்பது.
அந்த அருவ இயந்திரத்தின் முகமாக முதல்வரோ, பிரதமரோ இருப்பதால்தான் அவர்கள் முகத்தை அரசு அறிக்கைகளில், அரசு வழங்கும் சான்றிதழ்களில், பயனாளிகளுக்கான பொருட்களில் போட்டுக்கொள்ளும் உரிமை பெறுகிறார்கள். அருவத்தின் உருவமே முதல்வரும், பிரதமரும்.
தூத்துக்குடி படுகொலையின் வரலாற்றுச் சூழல்
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சி தனித்து ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது 2014ஆம் ஆண்டு. அதன் அரசியல் சித்தாந்தம் பாசிசத் தன்மை கொண்டது.
அது என்ன பாசிசம் என்றால் அரசின் நலன்களுக்கும், மக்களின் நலன்களுக்கும் எந்த விதமான முரண்களும் கிடையாது என்பதுதான். அரசும் இந்துராஷ்டிரம், மக்களும் இந்துக்கள் என்பதால் இந்துத்துவம் இரண்டையும் ஒற்றை நலனில் இணைத்துவிடும்.
அதனால் அரசை விமர்சிப்பவர்கள், அதன் முன்னெடுப்புகளை எதிர்த்துப் போராடுபவர்கள் எல்லோரும் தேச விரோதிகள் (ஆன்ட்டி நேஷனல்), நகர்புற வன்முறையாளர்கள் (அர்பன் நக்ஸக்சல்) என்று முத்திரை குத்தப் படுவார்கள்.
இதற்கு நேர்மாறாக மார்க்சீய நோக்கு கொண்ட இடது சாரி கட்சிகள் சமூகத்தை இயக்குவது வர்க்க முரணே. முதலீட்டிய சக்திகள் சுதந்திரவாத அரசதிகாரத்திற்கு நெருக்கமானவை, அரசின் உள்ளடக்கமாக உள்ளவை என்பதால் அந்த ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்கும் கடுமையான முரண்பாடு நிலவுகிறது என்று கூறுபவை. அதனால்தான் ஹிட்லர், முசோலினி முதல் ஹெச்.ராஜா வரை கம்யூனிஸ்டுகளை கடுமையாக இழித்துரைப்பார்கள், எதிர்ப்பார்கள்.
திராவிட சித்தாந்தம் வர்க்க முரண் மட்டுமில்லாமல், பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்திற்கும், பார்ப்பனரல்லாதோர் நலன்களுக்கும் உள்ள முரண்பாடு இந்திய குடிமைச் சமூகக் கட்டமைப்பான ஜாதீய அமைப்பை வழி நடத்துவதை எதிர்ப்பதையும், பார்ப்பனீயத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பதையும் முன்னுரிமையாகக் கொள்வதால் இடதுசாரிகளின் சித்தாந்த இணையாக விளங்குவதாகும்.
காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு வெகுஜன கட்சிகள், வெகுஜனவியம், மக்களுக்கிடையே நிலவும் முரண்களை சமப்படுத்துவதிலும் (Politics is the art of balancing contradictions – V.P.Singh), முதலீட்டிய உற்பத்தி சாத்தியமாக்கும் உபரியை பகிர்ந்தளிப்பதன் மூலம் மக்கள் நல அரசை உருவாக்குவதிலும் நாட்டம் கொண்டவை.
பெரும்பாலும் முதலீட்டியத்தினை அனுசரித்து இயங்கினாலும், மக்கள் நலனையும், சமூக முரண்களையும் மறக்காமல் கையாள நினைக்கும் விதத்தில் சுதந்திரவாத சித்தாந்தத்தைப் பின்பற்றுகின்றன எனலாம். விரிக்கில் பெருகும்.
பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் 37 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.
இயல்பாகவே வலதுசாரி தன்மை கொண்ட ஜெயலலிதா தன்மேல் உள்ள வழக்குகளைக் கருத்தில் கொண்டு, பாஜக அரசுக்கு ஆதரவான நிலையே எடுக்கிறார். அவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தடையில்லாமல் அவருக்கெதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உச்சரிக்கப்படாமல் உறங்கியதற்கு எந்த அருவ சக்திகள் காரணமென்பதை யூகம்தான் செய்ய முடியும்.
ஜெயலலிதா 2016 இறுதியில் மரணமடைந்தபோது, அ.இ.அ.தி.மு.க-வில் உட்கட்சி குழப்பங்களை தூண்டிய பாரதீய ஜனதா கட்சி, அதை முழுமையாகத் தன் பிடிக்குள் கொண்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என்ற இரட்டைத் தலைமையினை உருவாக்கி தன் பிடிக்குள் வைத்துக்கொண்டது.
எதற்கெடுத்தாலும் போராட்டமா?
ஜெயலலிதா மரணமடைந்ததற்கு அடுத்த மாதமே, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மிகப்பெரிய தன்னெழுச்சியான போராட்டம் தமிழகத்தில் நிகழ்ந்தது. போராட்டம் வெற்றியடைந்து தடை நீக்கப்பட்டாலும், அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதற்கான அரசியல் ஆதாயத்தைப் பெற போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
போராட்டம் முடிந்து விட்ட நிலையில், திடீரென காவல்துறை சென்னையில் கண்மூடித்தனமான ஒரு தாக்குதலை மீனவர்கள் மீது நிகழ்த்தியது. காவலர்களே வாகனங்களைக் கொளுத்திவிட்டுத் தாக்குதலை நியாயப்படுத்தினர்.
எதனால் இந்த அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது என்பதை விளக்குவது கடினம். உங்கள் போராட்டம் வெற்றியென நினைக்காதீர்கள், அரசு நினைத்தால் எப்படிப்பட்ட அடக்கு முறையையும் நிகழ்த்தும் என்று சொல்வதற்காகவா என்ற கேள்வி எழுகிறது. தூத்துக்குடி நிகழ்ச்சிக்கான சரியான முன்னோட்டம் இந்த நிகழ்வுதான்.
அந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் முனைப்பு பெற்றவண்ணம் இருந்தன. நியூட்ரினோ எதிர்ப்பு, கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு, எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு, இலங்கை கிரிக்கெட் அணி டி-20 பந்தயத்தில் சேப்பாக்கத்தில் விளையாட எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு எனப் பல்வேறு முனைகளில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.
எடப்பாடி பழனிசாமியைவிட அரசின், ஆளும் வர்க்கத்தின் மனநிலையைச் சிறப்பாக வெளிப்படுத்தியவர் ரஜினிகாந்த் அவர்கள்தான். தூத்துக்குடிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்துவிட்டு திரும்பிய அவரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தபோது
“எதற்கெடுத்தாலும் போராட்டம், போராட்டம் என்றால் நாடு சுடுகாடாக போய்விடும்” என்று சீறினார் அவர். அவரை எப்படியாவது ஜெயலலிதாவின் இடத்துக்குக் கொண்டுவர பாஜக ஏங்கியது. அடிப்படையில் ரஜினி புத்திசாலி மனிதர் என்பதால் தப்பித்துக் கொண்டார்.
தூத்துக்குடி படுகொலை: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை
இந்த வரலாற்றுப் பின்னணியை மனதில்கொண்டு நாம் கடந்த வாரம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையைப் பரிசீலித்தால் சில முக்கிய அம்சங்களை நாம் தவற விட முடியாது.
தூத்துக்குடியில் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடினார்கள் என்று சொல்லும்போது நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை இயங்க அனுமதித்த அரசை எதிர்த்துத்தான் போராடினார்கள். அதாவது அவர்கள் கோரிக்கையை ஸ்டெர்லைட் நிர்வாகம் அல்லது அதன் உரிமையாளர்களான வேதாந்தா நிறுவனம் கேட்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தங்கள் சுற்றுச்சூழலும், உடல்நலமும் சீர்கெடுவதாக கூறும் மக்களின் கோரிக்கை அரசை நோக்கியதுதான்.
உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் நலன் சார்ந்த போராட்டம் இது. பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை போல தோன்றினாலும், வேதாந்தா ஒரு மல்டி நேஷனல் கார்ப்பரேஷன். அதன் நடவடிக்கைகள் பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. சுற்றுச்சூழல் இயக்கம் என்பது சர்வதேச மானுட பிரக்ஞை கொண்டது.
இந்தப் பிரச்சினைக்கு எந்த கோணத்திலிருந்தும் உரிய முக்கியத்துவத்தை தமிழக அரசு வழங்கவில்லை என்பதுடன், துப்பாக்கிச் சூடு நடப்பதை நோக்கியே நிகழ்வுகள் செல்வதற்கு வழி வகுத்துள்ளது என்று கூறலாம்.
முதன்மையான பிரச்சினை, பேச்சுவார்த்தைகள் மூலம் நிலைமை சுமுகமடைய எல்லா சாத்தியங்களும் இருந்தும் அதைச் செய்யாதது.
இரண்டாவது, வேண்டுமென்றே நூறாவது நாள் முற்றுகை போராட்டத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது.
மூன்றாவது, சம்பவ தினத்தின்று உள்ளூர் நிர்வாகம் தெரிந்தே மிக மோசமாக நிலைமையைக் கையாண்டு கலவரச் சூழலை உருவாக்கியது.
நான்காவது, காரணமேயில்லாமல் எல்லா நெறிமுறைகளுக்கும் புறம்பாக துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது.
சுமுகப்படுத்த தவறியது: மாநில மாசுக்கட்டுப்பட்டு வாரியம், போராட்ட காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்தப்படி விதிமுறைகளைப் பின்பற்றாததால் உற்பத்தியை தொடர்வதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
இந்த அம்சத்தை எடுத்துக்கூறி, நிலைமையை முழுமையாக ஆராய்ந்து நிரந்தர தடை விதிக்க பரிசீலிப்பதாக அரசு கூறியிருந்தால் நிலைமை நிச்சயம் சுமுகமடைந்திருக்கும் என்று ஆணையம் கூறுகிறது. மாவட்ட ஆட்சியர் வாட்ஸ் அப் (!) மூலம் பல பரிந்துரைகளை முதன்மை செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு அனுப்பியுள்ளார்; அவர் முதல்வரிடம் அவற்றை தெரிவித்ததாகக் கூறுகிறார். ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவிர்த்தது: உளவுத்துறை நிலைமையின் தீவிரம் குறித்து பல எச்சரிக்கைகளை அரசுக்குக் கொடுத்துள்ளது. உளவுத்துறை அதிகாரி ஒருவர் சேலத்துக்கே சென்று முதல்வரிடம் மீனவர்கள் பெருமளவில் போராட்டத்தில் பங்கெடுத்தால் நிலைமை சிக்கலாகிவிடும். அதனால் பேச்சுவார்த்தை மூலம் அதைத் தவிர்க்க வேண்டுமென முதல்வரிடம் கூறியுள்ளார். எந்த நடவடிக்கையும் முதல்வர் எடுக்கவில்லை.
அரசு தரப்பில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் “சமூக விரோதிகள்” போராட்டத்தில் ஊடுருவி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதுதானே அரசின் வேலை? முற்றுகை போராட்டத்துக்கு முதல் நாள் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான போராட்டக் குழு தலைவர்களைக் கைது செய்திருக்கலாமே? முழு நகரத்திலும் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கலாமே?
முற்றுகை தினத்தன்று கலவர சூழலை உருவாக்கியது: சம்பவ தினத்தன்று காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் செய்த நிர்வாகக் குளறுபடிகள், மேற்கொண்ட பொறுப்பற்ற செயல்பாடுகள், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளை ஆணையம் விரிவாகப் பட்டியலிட்டுள்ளது.
மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளது. முதலமைச்சரும், தலைமைச் செயலரும் சிறிதளவு அக்கறை காட்டியிருந்தால்கூட இவ்வளவு முறைகேடுகளும், நிர்வாகச் சீர்கேடுகளும் நடந்தேறியிருக்க வாய்ப்பில்லை என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. மாவட்ட ஆட்சியர் என்பவரோ, காவல்துறை ஐஜி என்பவரோ… முதலமைச்சரே நேரடியாக அழைத்துப் பேசக் கூடியவர்கள்தான்.
முகாந்திரமில்லாமல் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது: துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதற்கு போதிய முகாந்திரமில்லை என்பதை ஆணையம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும், ஸ்டெர்லைட் குடியிருப்பிலும் வாகனங்கள் எரிக்கப்பட்டது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த பிறகுதான் என்று ஆணையம் கூறுகிறது.
அந்த வாகனங்களை எரித்தவர்கள் போராட்டக் குழுக்களை சார்ந்தவர்களோ, பொதுமக்களோ அல்ல என்று தெரிகிறது. கேமராக்களில் பதிவாகியுள்ள அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்கிறது ஆணையம். அதனால் அவர்கள் அரசு தரப்பே கூட்டிவந்த கூலிப்படையாக இருக்கலாம் எனக் கருத இடமுள்ளது என்று ஆணையம் கூறுகிறது.
இதையெல்லாம் ஆராயும்போது தங்கள் கோரிக்கைகளுக்காக, வாழ்வாதாரங்களைக் காக்க போராட முன்வரும் பொதுமக்களை அச்சுறுத்த, அவர்களை எச்சரிக்க மேற்கொள்ளப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கையாகத்தான் தூத்துக்குடி படுகொலையைக் கருத வேண்டியுள்ளது.
அதாவது ஜெனரல் டயர் 1919ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் எந்த காரணங்களுக்காக மக்களை சுட்டாரோ, அதே போன்ற காரணங்கள்தான் நூறாண்டுகள் கழித்து இங்கும் செயல்பட்டுள்ளன என்று நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது ஆந்திராவில் தாக்குதல்: வைகோ கண்டனம்
அன்றும் இன்றும்… நினைவில் நிற்கப்போவது படத்தின் வசூலா? படத்தின் தரமா?