மின்னம்பலம் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இன்று (ஜூலை 1) புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி மின்னம்பலத்தில், ‘வருகிறது ஓபிஎஸ் சின் தொண்டன் டிவி-பேப்பர்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், ‘அதிமுகவில் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை, ஜெயா டிவி இருந்தது. பிறகு நமது அம்மா பத்திரிகை, நியூஸ் ஜெ டிவி உருவானது. ஆனால் இப்போது இவை இரண்டிலும் ஓபிஎஸ் தரப்பு செய்திகள் வருவதில்லை. எனவே நம் தரப்பு அறிவிப்புகள், செய்திகள், அறிக்கைகளுக்காக புதிய செய்தி ஊடகம் வேண்டும் என ஓபிஎஸ் சிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதிமுக ஒன்றுபடும் வரையில் தனது தரப்புக்கு என அதிகாரபூர்வ செய்தித் தாள், டிவி வேண்டும் என்ற ஆலோசனையையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார் ஓபிஎஸ். அதன் விளைவாக விரைவில் ’தொண்டன்’ என்ற பெயரில் செய்தித் தாள் மற்றும் டிவியை கொண்டுவர ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார்.
அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணத்துக்கு மாறாக சட்ட விதிகளைத் திருத்தியதோடு… சில கோடீஸ்வர நிர்வாகிகள் துணையோடு எடப்பாடி செயல்பட்டு வருகிறார் என்பதுதான் பன்னீரின் தொடர் குற்றச்சாட்டு. அதனால்தான் தன் தரப்பு செய்திகளை வெளியிட, தொண்டன் என்ற பெயரில் செய்தித் தாள் துவக்க இருக்கிறார்.
’தொண்டன்’ செய்தித் தாளின் ஆசிரியராக ஏற்கனவே நமது எம்.ஜிஆர், நமது அம்மா ஆகிய இதழ்களின் ஆசிரியர், பதிப்பாளராக பொறுப்பு வகித்த மருது அழகுராஜ் செயல்டுவார்” என்று தெரிவித்திருந்தோம்.
அதன்படியே இன்றைய (ஜூலை 1) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார் ஓ.பன்னீர் செல்வம். நமது இயக்க செய்திகளை கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல, ‘நமது புரட்சித் தொண்டன்’ என்ற நாளிதழ் தொடங்கப்படுகிறது. இதன் ஆசிரியராக மருது அழகுராஜ் இருப்பார் என்று அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.
வேந்தன்