ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (செப்டம்பர் 26) சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. காவல் துறை இதற்குப் பதிலளிக்காததால் ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 22ம் தேதி பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பின் முந்தையகால நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமல் அதன் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே, மகாத்மா காந்தியை கொலை செய்தபோது இனிப்பு விநியோகித்து கொண்டாடிய அமைப்பு ஆர்எஸ்எஸ்.
மகாத்மா காந்தியை கொன்ற ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கக்கூடாது. விஜயதசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக சித்தரிக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. அக்டோபர் 2ம் தேதி விசிக சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடைபெற உள்ளது.
நீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாமல் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது பாஜக மாவட்டத் தலைவர்கள் விளம்பரத்துக்காக தங்கள் வீடுகளின் முன் குண்டுகளை வீசி வரும் சம்பவங்கள் நடைபெறும் சூழலில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால், அது பொதுமக்கள் நடமாட்டத்திற்கு ஆபத்தாக முடியும்.
எனவே, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஊர்வலத்திற்கு காவல் துறை அனுமதி அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்’ என அந்த மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இன்று (செப்டம்பர் 26) காலை, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி தொல்.திருமாவளவன் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்திருந்தார்.
ஜெ.பிரகாஷ்
நடைப்பயணத்தில் கால்பந்து விளையாடிய ராகுல்!
மூன்று நாட்களுக்கு கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை