ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (மார்ச் 9) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பியது. அதனை கடந்த 4 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர், நேற்று இரவு தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இதனையடுத்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2023- 2024- ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் மற்றும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீண்டும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டம் நிறைவுற்ற பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், ”ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று ஆளுநர் மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த மசோதாவானது மாநில அரசின் அதிகாரங்கள் பட்டியலில் 33வது பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் 34வது பிரிவின் கீழ் தான் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதை மசோதாவில் குறிப்பிட்டு வரும் சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப உள்ளோம். 2வது முறையாக மாநில அரசு ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம். எனவே மசோதாவை ஆளுநரால் திருப்பி அனுப்ப முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படியே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து பரிந்துரைகள் பெறப்பட்டன. நிபுணர் குழு அளித்த பரிந்துரையின் படியே மசோதா நிறைவேற்றப்பட்டது.
மக்களை பாதுகாக்கவே ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம். நாங்கள் அதற்கு முன்னோட்டமாக தடை செய்கிறோம். கடந்த 4 மாத காலத்தில் 12 பேர் ஆன்லைன் ரம்மி விளையாடி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தான் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!
உதவி கேட்ட தயாரிப்பாளர்: உறுதி அளித்த ரஜினிகாந்த்