நாடாளுமன்ற தேர்தலுக்காகத் தான் இந்த தீர்மானம்: வானதி சீனிவாசன்

Published On:

| By Kavi

கிறிஸ்தவர்களாக மதம்மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தனித் தீர்மானம் என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிறிஸ்தவர்களாக மதம்மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19) தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன், “இதுதொடர்பான விஷயங்களை ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீதிமன்றத்தில் இந்த பிரச்சினை இருக்கும் நிலையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பாக கிறிஸ்துவம் இஸ்லாமிற்கு மதம் மாறினால் கூட தீண்டாமை கொடுமை இருக்கிறது என இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்கிறது. இதை முதல்வர் ஒத்துக்கொள்கிறாரா என்று விளக்க வேண்டும்.
ஏனென்றால் தீண்டாமை கொடுமைக்கு எதிராகத்தான் மதம் மாறுகிறோம் என்று சொல்கிறபோது, அந்த மதத்திற்கு சென்றாலும் தீண்டாமை கொடுமை இருக்கிறது என்று சொல்வது போல் உள்ளது என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ”தீண்டாமைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மதம் மாறினாலும், அவர்கள் எந்த வழியில் பிறந்தார்களோ அந்த உரிமையைத்தான் முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். மதம் மாறுவது என்பது அவரவர் விருப்பம். இதில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீதிமன்றத்தில் உள்ள வழக்குக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. நீதிமன்றம் சட்டமன்றத்தை கட்டுப்படுத்தாது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒரு சமூகத்திற்கு தனி தீர்மானம் கொண்டு வருவதற்கு முழு உரிமை உண்டு. இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லையா? என உங்கள் கருத்தை தெரிவிக்கலாம்” என்றார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் இயற்றுகின்ற சட்டம் என தனது பேச்சை வானதி சீனிவாசன் தொடங்கிய போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ”இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இல்லை. இப்போதுதான் சட்டம் கொண்டு வருகிறோம். மத்திய அரசுக்கு அனுப்ப போகிறோம். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
அப்போது வானதி சீனிவாசன், “ஒன்று இந்த விவகாரத்தில் ஏற்கனவே கமிஷன் போடப்பட்டுள்ளது. இரண்டாவது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. மூன்றாவது மதம் மாறினாலும் தீண்டாமை இருக்கிறது என ஒத்துக்கொள்கிறீர்களா?,” என கேள்வி எழுப்பினார்.
அப்போது தீண்டாமை கொடுமை இருக்கிறது என்பதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
அப்படியானால் இந்த தீர்மானத்தை எதற்காக கொண்டு வருகிறீர்கள்? அடிப்படை விஷயம் என்ன?. மக்கள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் தான் இந்த தீர்மானத்திற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது என வானதி சீனிவாசன் பேசிக்கொண்டிருக்கும் போதே நன்றி தெரிவித்து, அடுத்ததாக பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணியை பேச அனுமதித்தார் சபாநாயகர்.
இதனால் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “சமூக நீதி, திராவிட மாடல் அரசு எனப் பேசும் திமுக வேங்கைவயல் பிரச்சினை, பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான சிறப்பு சட்டம், வாரம் ஒரு ஆணவக் கொலைகள் பற்றி பேசாதது ஏன்?. முழுக்க முழுக்க தமிழக அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்த தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம் என்றார்’’ என்றார்.
பிரியா

டாப் 2 அணிகளான ராஜஸ்தான்- லக்னோ இன்று பலப்பரீட்சை!

பாரிமுனை கட்டட விபத்து: 4 பேரின் நிலை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share