கடலூரில் அதிகாரிகளிடம் துறைவாரியாக புள்ளிவிவரங்களை பெற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக நிதி திரட்டுவது, கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுப்பது என இப்போதிலிருந்தே மாநாட்டுக்கான பணிகளை உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக செய்து வருகிறார்.
மாவட்டம் தோறும் சென்று இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் திருவண்ணாமலையில் செயல்வீரர்கள் கூட்டத்தை கூட்டிய உதயநிதி அடுத்தது பெரம்பலூர், அரியலூர, கடலூர் மாவட்டங்களுக்கும் சென்று வந்தார்.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து துறை பணிகளையும் ஆய்வு செய்தார். அடுத்ததாக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவிட்டு, அன்று இரவு தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் ஓய்வெடுத்தார்.
நேற்று காலை புறப்பட்டு கடலூர் மாவட்டத்துக்கு சென்றார். அவரை, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அவரது மகனும் கழக மாவட்ட பொருளாளருமான கதிரவன், மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெ.கணேசன், அவரது மகனும் விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளருமான வெங்கட் என்ற வெங்கடேஷ் மற்றும் எம்.எல்.ஏ சபா ராசேந்திரன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்,
வரும் வழியில் சிப்காட் பகுதியை பார்வையிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
தொடர்ந்து, கடலூர் மாவட்டம் கழுதூரில் அமைச்சர் கணேசனுக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் 12 மணியளவில் கலந்துகொண்டார்.
அப்போது அமைச்சர் கணேசன் சார்பில் அவரது மகன் வெள்ளி வீரவாள் பரிசளித்தார். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சார்பில், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் வெள்ளி செங்கோல் கொடுத்தார்.
அமைச்சர் கணேசன் ரூ 1,11,11,111 நிதியை சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கு வழங்குகிறேன் என்று தொகையை குறிப்பிட்டு கடிதம் கொடுத்தார், அந்த கடிதத்தில் கணேசனின் கையெழுத்து இல்லாததை கவனித்த உதயநிதி, ‘கையெழுத்து போட்டுக் கொடுங்கள்’ என்று அக்கடிதத்தை மீண்டும் அமைச்சர் கணேசனிடமே கொடுத்தார். பின் கையெழுத்து போட்டுக்கொடுத்த அத்தொகையை பெற்றுக்கொண்டார்.
அடுத்ததாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மைக் பிடித்து கடலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது ரூ.6,66,66,666 நிதியாக வழங்கினேன். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞர் அணி நிகழ்ச்சி என்றாலும் கிழக்கு மாவட்டம் சார்பில் முதல் தவணையாக நான் ரூ.2 கோடி அளிக்கிறேன் என்று சவாலாக அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசும் போது, “மாநாடு நடத்த நிதி தேவைதான், அதே நேரத்தில் பெரும் அளவில் இளைஞர்களை அழைத்து வர வேண்டும்.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக சார்பில் மாநாடு நடத்தினார்கள். அதில் கொள்கை ரீதியான தீர்மானம் இல்லை, அவர்களுக்கு மாநாடு என்றால் என்ன வென்று சேலம் மாநாட்டை நாம் காட்ட வேண்டும்” என்றார்.
மதியம் 1.15 மணிக்கு கூட்டம் முடிந்தது. உதயநிதியின் கான்வாய் கடலூர் நோக்கி செல்ல தயாராக இருந்தது. அவரது காரில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் கணேசனும் பின் சீட்டில் அமர்ந்தனர்.
அப்போது அமைச்சர்களில் ஒருவர், ‘மதியம் சாப்பாடு’ என்று மெதுவாக கேட்க, ‘நேரமில்லை கடலூரில் ஆய்வு கூட்டத்துக்கு போக வேண்டும். கடலூரில் சாப்பிடலாம்’ என்றார் உதயநிதி.
தொடர்ந்து கடலூர் நோக்கி செல்லும் வழியில் உதயநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடலூர் அரசு சுற்றுலா மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு சென்றடைந்தார் உதயநிதி. திமுக நிர்வாகிகள் கூட்டம் உதயநிதியை சந்திக்க முட்டி மோதியது,
கடலூர் மாநகர மேயர் சுந்தரி அவரது கணவரும் மாநகர செயலாளருமான ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சிலர் சுற்றுலா மாளிகைக்குள் வந்தனர், அதைப் பார்த்து கோபமான அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், ‘சாப்பிட விடுங்கயா, ஏய் ராஜா நீ முதலில் வெளியில் போ’ என விரட்டினார்.
அதன்பிறகு இளைஞர் அணி அமைப்பாளரும் அரசு ஒப்பந்தக்காரருமான கார்த்திக் எடுத்து வந்த சைவ உணவை, அமைச்சர்கள் உதயநிதி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், கணேசன் ஆகிய மூவரும் சாப்பிட்டனர்.
இதையடுத்து கூட்டணி கட்சி எம்எல்ஏ.க்கள் வேல்முருகன், சிந்தனை செல்வன், ராதாகிருஷ்ணன், திமுக எம்எல்ஏ சபா ராசேந்திரன் ஆகியோர் உதயநிதிக்கு சால்வை அணிவித்தனர்.
உடனே 4.00 மணிக்கு புறப்பட்டு 4.10க்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார் உதயநிதி . அங்கு அனைத்து துறையினரும் ஸ்டால் போட்டிருந்தனர். கலைஞர் நூற்றாண்டு விழாவை குறிப்பிடும் வகையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 அடி உயர தேசிய கொடிக்கம்பத்துக்கு அடிக்கல் நாட்டினார் உதயநிதி. 4.45 மணிக்கு ஆய்வு கூட்டம் தொடங்கியது, மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
அமைச்சர் உதயநிதிக்கு இடது பக்கம் அமைச்சர்கள் பன்னீர்செல்வம் மற்றும் கணேசன், எம் எல் ஏ க்கள் வேல்முருகன், ஐய்யப்பன்,சிந்தனை செல்வன்,
வலது பக்கம் சிறப்பு செயலாகத் திட்ட துறை செயலாளர் தரேஷ் அகமது ஐஏஎஸ், கலெக்டர் அருண் தம்புராஜ், எம்எல்ஏ சபா ராசேந்திரன், எஸ்பி ராஜாராம் ஆகியோர் மேடையில் இருந்தனர், கீழே அனைத்து துறைகளின் அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.
துறை வாரியா ஆய்வு
அமைச்சர் உதயநிதி டேப்லெட்டை (tab) கையில் வைத்துக்கொண்டு, கடலூர் மாவட்டத்தின் அனைத்துத் துறையின் புள்ளி விபரங்கள், மாநில அளவிலான புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.
முதலில், எம்எல்ஏ அலுவலகங்களில் இ சேவை மையம் தொடங்கப்பட்டதா? எத்தனை தொடங்கப்பட்டது?, எங்கெங்கு தொடங்கப்படவில்லை என கேட்டார் அமைச்சர் உதயநிதி.
உடனே எம்எல்ஏ வேல்முருகன் இ சேவை மையம் தொடங்கினால், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் என ஒவ்வொரு விண்ணப்ப பதிவுக்கும் கட்டணம் ரூ 60 வசூல் செய்யவேண்டும்.
அப்படி செய்தால் எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணம் வசூல் செய்கிறார்கள் என்ற கெட்ட பெயர் வரும், அதனால் நானும் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ சிந்தனை செல்வனும் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார், சரி முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார் உதயநிதி.
காலை உணவு திட்டத்தில் எவ்வளவு மாணவர்கள் பயன் பெறுகிறார்கள், எவ்வளவு பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ளது, இந்த திட்டத்தின் பிறகு மாணவர்கள் எண்ணிக்கை எப்படி உள்ளது .மாணவர்கள் – பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள், மாணவர்களின் வருகை பதிவேடுகளை கவனிக்கிறீர்களா? ஆய்வு செய்கிறீர்களா என கேள்வி எழுப்பினார். எவ்வளவு மாணவர்கள் பயனடைகிறார்கள்? சமையல் கூடங்கள் எப்படி உள்ளன? என்றும் கேட்டார்.
இதற்கு எம்.எல்.ஏ வேல்முருகன், ‘சமையல் கூடம் சரியில்லாமல், என் தொகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் காயமடைந்தார். அவருக்கு மூன்று தையல் போடப்பட்டுள்ளன’ என்றார்.
இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் எவ்வளவு பள்ளிகளில், எவ்வளவு மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்? காலை உணவு திட்டம் எத்தனை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது? இன்னும் எவ்வளவு பள்ளிகளில் செயல்படுத்த போகிறோம் என்ற விவரங்களை உதயநிதியிடம் தெரிவித்தனர்.
பணிகள் முடிக்கப்படாமல் இருப்பது ஏன்?
பிடிஒகளிடம் (ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்) , சாலை பணிகள், வீடு அலுவலகம் கட்டும் பணிகள் என 60% திட்ட பணிகள் நடைபெறாமல் உள்ளது. இவ்வளவு பணிகள் முடிக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டார் உதயநிதி. அவர் கேட்டதும், விரைவில் முடிப்பதாக பதில் கூறினார்கள் அதிகாரிகள்.
இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பற்றி கேட்டறிந்தார் உதயநிதி. புவனகிரி, சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப்பூர், விருத்தாசலம் ஆகிய பத்து வட்டங்களில் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,64,760, இதில் சரிபார்க்கப்பட்டவை 47,393, சரிபார்க்கப்பட வேண்டியது 2,17,367 என்றனர் அதிகாரிகள்.
தொடர்ந்து அவர்கள், முதல்வரின் முகவரி திட்டத்தில் 01.01.2023 முதல் 31.07.2023 வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 30,446, அனுமதிக்கப்பட்டவை 18,768, நிராகரிக்கப்பட்டது 6,545, நிலுவையில் உள்ளது 5,133. அதிகமான பணிகள் நிலுவையில் உள்ள துறைகளில் முதலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மூன்றாவது இடத்தில் உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை” என்றனர்.
இதை கேட்டறிந்த உதயநிதி பட்டா மாறுதல், பட்டா வழங்கப்படுதலில் அதிகமாக நிராகரிப்பு செய்திருப்பதுப் பற்றியும், சாதி சான்று இருப்பிடம் சான்றுகள் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதைப் பற்றியும் டிஆர்ஒவிடம். கேட்டார்.
கடலூர் கல்வியில் ஏன் இவ்வளவு பின் தங்கியிருக்கிறது. என்ன காரணம் என்று சிஇஒவிடம் கேட்க, அவர் பதில் சொல்லாமல் முழித்தார்.
அப்போது அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ‘ஏங்க சிஇஓ உங்களுக்கு சர்வீஸ் முடிய எவ்வளவு நாள் இருக்கிறது?’ என்று கேட்டார். அதற்கு சிஇஓ, ‘ஒரு வருடம்; என்று சொல்ல, சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை சொல்ல சொல்லுங்கள் என்றார் அமைச்சர்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடமும் உதயநிதி ஸ்டாலின் துருவி, துருவி கேள்வி எழுப்பினார்.
அதிகமாக விபத்துகள் நடப்பது ஏன்? வேகத்தடை, ரிப்ளைட்டர்கள் என சாலை பராமரிப்பு பணிகளை கவனியுங்கள். பல கட்டிடங்கள், கால்வாய் கட்டும்போதே இடிந்து விழுவது போன்ற வீடியோக்கள் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வருகிறது இதனால் அரசுக்கு கெட்ட பெயர் உருவாகிறது இனி கவனமாக பாருங்கள் என்று எச்சரித்தார்.
இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், “கடலூருக்கு நான் வந்த பிறகு முடிக்கப்படாமல் இருந்த பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக முடித்து வருகிறேன். அனைத்து பணிகளையும் விரைவில் சிறப்பாக முடிக்கிறேன்” என்றார்.
காவல் துறையில் கேட்கும் கேள்விகளுக்கு புள்ளி விவரங்களுடன் எஸ்பி ராஜாராம் பதிலளித்தார், விபத்துகள் மற்றும் உயிரிழப்பு குறைந்திருப்பதுப் பற்றியும், குற்ற வழக்குகள் குறைந்திருப்பது பற்றியும் உதயநிதியிடம் கூறினார்.
இவ்வாறாக பிற்பகல் 4.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 7.15 மணிக்கு முடிந்தது. இதையடுத்து நேராக சென்னை புறப்பட்டார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதியின் ஆய்வு கூட்டம் அதிகாரிகளை அதிர வைத்துள்ளது என்கிறார்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில்.
-வணங்காமுடி
காவல்நிலையத்தில் காணாமல் போன செல்போன்கள்: திருடர்கள் கைவரிசை?
ரீஎண்ட்ரி கொடுக்கும் 90s கிட்ஸின் ஃபேவரைட் பைக்!