“இது ட்ரெய்லர் தான்”: தியானத்துக்கு மத்தியில் மோடியின் அடுத்தடுத்த ட்வீட்!

Published On:

| By Kavi

மூன்றாவது நாளாக விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்யும் பிரதமர் மோடி இன்று பிற்பகல் அங்கிருந்து புறப்படுகிறார்.

மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பிரதமர் மோடி கடந்த மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகைத் தந்தார்.

பகவதி அம்மன் கோயிலில் சாமிதரிசனம் செய்த அவர், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று (ஜூன் 1) மூன்றாவது நாளாக தியானத்தை தொடர்கிறார். இடையிடையே சூர்ய தரிசனம், விவேகானந்தர் சிலைக்கு வழிபாடு, நடைபயிற்சி போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

இன்று காலை சூரிய பகவானை வழிபாடு செய்த அவர், கடல் அலையை ரசித்துகொண்டே நடைபயிற்சி மேற்கொண்டார். கையில் ருத்ராட்ச மாலையை வைத்துக்கொண்டு அவர் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

தியானத்துக்கு மத்தியில் சமூக வலைதள பக்கங்களையும் கையாண்டு வருகிறார்.

நேற்று மாலை அவர், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்  ரெமல் புயலுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள் இயற்கை பேரிடர் குறித்து பதிவு செய்திருந்தார்.

இரவு 7.55 மணிக்கு ஜிடிபி வளர்ச்சி குறித்து பதிவு செய்திருந்தார்.

“2023-24ஆம் ஆண்டுக்கான 8.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி, உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து உள்ளது என்பதை காட்டுகிறது. இது அடுத்தடுத்து வரவிருக்கும் விஷயங்களுக்கான ட்ரெய்லர் மட்டுமே” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இன்று அவரது தொகுதி வாரணாசி உட்பட 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், இளைஞர்களும், பெண்களும் அதிகளவு வந்து வாக்களிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை மேலும் துடிப்பானதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுவோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாபி, இந்தி, ஒடியா, பெங்காலி என அந்தந்த மாநில மொழிகளில் ட்வீட் போட்டுள்ளார்.

தொடர்ந்து, தியானத்தில் ஈடுபட்டு வரும் அவர் பிற்பகலில் தியானத்தை முடித்துக்கொண்டு, சுவாமி விவேகானந்தரை தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு தனி படகு மூலம் செல்கிறார்.

அங்கு திருவள்ளுவர் பாதத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் அவர், அங்கிருந்து படகுதுறைக்கு செல்கிறார்.

படகுதுறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓடிடியால் தியேட்டர் மவுசு குறையாது : மாரி செல்வராஜ்

குறைந்த தங்கம் – வெள்ளி விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share