டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் காய்ச்சலுக்கு இதுதான் காரணம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பற்றிய  மருத்துவ செய்தி குறிப்பு இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான  ஸ்டாலினுக்கு நேற்றிலிருந்து சளி, காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து  அவருக்கு பரிசோதனைகள் செய்ததில் அவருக்கு வைரல் ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதற்குண்டான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு முதலமைச்சர் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்’ என்று மெட்ராஸ் இ.என்.டி. ஃபவுண்டேஷன் இயக்குனரான டாக்டர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அரசின் நிர்வாகத் தலைவர் என்ற முறையிலும் திமுக கட்சியின் தலைவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்கள். விழாக்கள் என்று கலந்துகொண்டு வருகிறார்.

உதாரணத்துக்கு கடந்த அக்டோபர் மாதத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கூட அக்டோபர் 1 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தொடங்கி, 3,4 தேதிகளில் கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு,

6 ஆம் தேதி திக விழாவில் கலந்துகொள்ள தஞ்சை பயணம், 9,10,11 சட்டமன்றத் தொடர், 14 சோனியாவுடன் மகளிர் உரிமை மாநாடு, அதன் பின் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கள ஆய்வுக் கூட்டங்கள்,

20 ஆம் தேதி பங்காரு அடிகளார் மறைவுக்காக மேல் மருவத்தூர் பயணம், 21 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி வேணு மறைவுக்காக திருவள்ளூர் பயணம், 21 ஆம் தேதியே திருவண்ணாமலை பயணம்,

மாதக் கடைசியில் தேவர் ஜெயந்திக்காக மதுரை, ராமநாதபுரம் மாவட்டப் பயணம் என்று ஒவ்வொரு வாரமும் வெளியூர் பயணம் செய்திருக்கிறார் ஸ்டாலின். இந்த பயணங்கள் போக சென்னையில் இருக்கும் நாட்கள் எல்லாம் காலை, பகல், மாலை என முழுக்க முழுக்க நிகழ்ச்சிகள்தான்.

71 வயது நடந்துகொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி ஓய்வே இல்லாமல் மேற்கொள்ளும் தொடர் பயணங்கள், கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைப் பார்த்த அவரது மருத்துவர்கள், ‘இவ்வளவு ஸ்ட்ரைன் பண்ணிக் கொள்ளாதீர்கள். வாரத்துக்கு ஒரு நாளாவது வீட்டில் ஓய்வில் ரிலாக்ஸாக இருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் மருத்துவர்களின் அறிவுறுத்தல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அரசு, கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி, உடலை ஃபிட் ஆக வைத்துக் கொள்ள ஜிம் பயிற்சி என்று ஸ்டாலின் தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் இடைவிடாத அவரது நிகழ்ச்சிகளை சற்றே குறைத்துக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இப்போது கூட தொடர் பயணத்தால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாகவே ஸ்டாலினுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது காய்ச்சலுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருக்கிறார் ஸ்டாலின்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

புஸ்ஸி ஆனந்த் வீட்டுக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி

எரிந்த நிலையில் சடலம்: மருத்துவ மாணவர் உயிரிழப்பு!

 

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0