பிரிட்டனில் இன்று (ஜூலை 4) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் முதன்முறையாக தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் போட்டியிடுவது பலரையும் உற்றுநோக்க செய்துள்ளது.
பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியினரான ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது.
இந்நிலையில் பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதன்மூலம் 650 இடங்களுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியும், கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரு கட்சியிலும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறியவர்களுக்கும், கறுப்பினத்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பொதுத்தேர்தலில் உமா குமரன் (LP), கவின் ஹரன்(CP), மயூரன் செந்தில் நாதன்(RUK), கமலா குகன்(LD), டெவினா பால்(LP), நரணி குத்ரா ராஜன்(TGP), கிரிஷ்ணி(LP), ஜாஹிர் உசேன்(LD) ஆகிய 8 தமிழர்கள் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உட்பட பல்வேறு கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் அதிகம் பேர் போட்டியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனை பொறுத்தவரை கடந்த 15 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சிதான் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறது. ஆனால் ஆட்சி நிர்வாகத்தில் தடுமாற்றம் காரணமாக இந்த 15 ஆண்டுகளில் அக்கட்சி சார்பில் 5 முறை பிரதமர்கள் மாறியிருக்கின்றனர்.
மேலும் பிரிட்டன் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்து வருவது, மக்கள் மத்தியிலும் அதிருப்தியை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூர் தேர்தல்களில் மக்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.
தற்போது நடைபெற உள்ள பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளிலும் கியெர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சியே வெற்றிபெறும் எனவும், ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி
நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: பிரதமர் விருந்து!