இந்தியாவை இரண்டு நாடுகளாக பிரித்து கூறு போட்டது ஜின்னா அல்ல, வீர சாவர்க்கர்தான் என்று அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்.பி.ஆ.ராசா தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற மக்களவையில் இன்றும் (டிசம்பர் 14) அரசியல் சாசனம் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரு நாடுகளாக கூறு போட்டது சாவர்க்கர்தான்!
அப்போது திமுக எம்பி ஆ.ராசா பேசுகையில், ”இந்த அவையில் ஒரேயொரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா செய்தது என்ன என்று ஏதாவது ஒன்றை காட்ட முடியுமா?
பாஜக 400 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினால் அரசியல் சாசனத்தைத் திருத்துவோம் என்று சொன்னது பாஜகவின் துணைத் தலைவர்தான். அப்படி அரசியல் சாசனத்தை திருத்தி இந்தியாவை இந்துராஷ்டிராவாக பிரகடனப்படுத்துவோம் என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தியாவை இரு நாடுகளாக கூறு போட்டது ஜின்னா அல்ல. வீர சாவர்க்கர்தான். 1924-ம் ஆண்டே வீர சாவர்க்கர்தான் இரு நாடுகள் குறித்து பேசியும் எழுதியும் இருக்கிறார்.
இரு நாடுகள் கோட்பாடு சாவர்க்கரால் உருவாக்கப்பட்டது. ஆனால் அதை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. “இந்தியா இந்து ராஜ்ஜியமாக மாறினால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்து ராஜ்யத்தை எந்த விலை கொடுத்தாவது தடுத்தாக வேண்டும்” என்று அம்பேத்கர் கூறினார்.
ஆனால் மோசமான சக்திகள் ஆட்சிக்கு வரும் என்று அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.” என்று பேசினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாஜக ஆட்சியில் அனைத்தும் போய்விட்டன!
தொடர்ந்து ஆ.ராசா பேசுகையில், “அரசியல் சாசனத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாக ராஜ்நாத் சிங், ரிஜுஜு மற்றும் பாஜக இருக்கைகளில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் பேசினர். ஆனால் அவை முற்றிலும் பாசாங்குத்தனமாக இருப்பதால் நான் மகிழ்ச்சியடையவில்லை.
இந்த அவையில் எப்போதெல்லாம் ஜனநாயகம் விவாதிக்கப்படுகிறதோ, மிசா பற்றி பாஜக பேசுகிறது. அவர்களுக்கு நான் சொல்கிறேன். “மிசாவின் போது ஜனநாயகம் மட்டுமே தாக்கப்பட்டது, ஆனால் பாஜக தலைமையிலான ஆட்சியில், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், கூட்டாட்சி, நீதித்துறை பாரபட்சமின்மை என கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட அரசியலமைப்பின் ஆறு அடிப்படைக் கட்டமைப்புகளும் போய்விட்டன” என்றார்.
ஜனநாயகம் காயப்பட்டு கொண்டிருக்கிறது!
அப்போது, “கலைஞரும் எமர்ஜென்சியின் போது கைது செய்யப்பட்டார் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் – திமுக கூட்டணியைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
அதற்கு பதிலளித்தளித்த ஆ.ராசா, “மிசா காலத்தில் 24 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். போலீசாரால் துன்புறுத்தப்பட்டார். அவரை பார்க்க அவரது தந்தை சிறைக்கு சென்றார். எப்போதும் அரைக்கை சட்டை மட்டுமே அணியும் தனது மகன் முழுக்கை சட்டை அணிந்திருப்பதை கண்டு பையன் தாக்கப்பட்டதை உணர்ந்த தந்தை, ’போலீசார் உன்னை அடித்தார்களா?’ என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர், ”எனது உடல் காயங்களை பற்றி வருத்தபட வேண்டாம். இந்திய ஜனநாயகம் காயப்பட்டு கொண்டிருக்கிறது. அதைப்பற்றி பேசி அதை காப்பாற்றுங்கள்” என்று கூறினார். அந்த இளைஞர் வேறு யாருமல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.
காங்கிரஸுடன் கூட்டணி எதற்காக?
2ஜி வழக்கில் நாங்கள் (ஆ.ராசா மற்றும் கனிமொழி) கைது செய்யப்பட்டபோது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. நாங்கள் அவர்களிடம் பிச்சை கேட்கவில்லை. நாங்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டபோது நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். உங்களிடமும் நாங்கள் தயவு எதிர்பார்க்கவில்லை. பின்னர் நாங்கள் எதற்காக நாங்கள் இங்கே (காங்கிரஸுடன்) நிற்கிறோம்?
“எங்களுக்கு வலி தெரியும். எங்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டாம். நாங்கள் காயம்பட்டோம், எங்கள் கட்சி தாக்கப்பட்டது, ஆனால் நாங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அரசியலமைப்பு, தேசியம் மற்றும் நாட்டை காக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், அதனால்தான் நாங்கள் காங்கிரஸுடன் அமர்ந்திருக்கிறோம். காங்கிரஸுடன் திமுகவுக்கு பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அரசியல் சட்டத்தை நிலைநிறுத்துவதற்காக அவர்களுடன் அமர்ந்திருக்கிறோம்.
“நாங்கள் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால் நாங்கள் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கிறோமா? என்பதே முக்கியம்” என்று ஆ.ராசா பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
INDvsAUS : 100வது டெஸ்ட்… கபா மைதானத்தில் வரலாறு படைப்பாரா கோலி?