“ED சம்மன் அல்ல பாஜக சம்மன்” : அமலாக்கத் துறையில் லாலு ஆஜர்!

அரசியல் இந்தியா

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் விசாரணைக்காக அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 29) ஆஜரானார்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது ரயில்வே துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி நிலங்களை லாலு லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லாலு மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

லாலு பிரசாத் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதி சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு பிரசாத் யாதவ் இன்று (ஜனவரி 29) ஆஜரானார். லாலுவிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று மாலையே டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்துவிட்டனர். இன்று காலை  11 மணிக்கு ஆஜரான லாலுவிடம், 11.30 மணி முதல் ED அதிகாரிகள் விசாரணயை தொடங்கி, நிலத்தை லஞ்சமாக பெற்றது தொடர்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லாலுவுடன் அவரது மகள் மிஷா பாரதியும் ED அலுவலகத்துக்கு சென்றுள்ளார். ஆர்ஜேடி நிர்வாகிகளும் அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு குவிந்திருப்பதால், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விசாரணை குறித்து, மிசா பாரதி கூறுகையில், “இதுவொன்றும் புதிதல்ல. அவர்களுடன் (பாஜக) செல்லாதவர்களுக்கு இதுபோன்று சம்மன் அனுப்பப்படுகிறது. நாங்கள் அமலாக்கத் துறைக்கு ஒத்துழைப்பு அளித்து கேள்விகளுக்கு  பதிலளிக்கிறோம்”  என்று பேட்டி அளித்துள்ளார்.

ஆர்.ஜே.டி. எம்.பி. மனோஜ் ஜா கூறிகையில், “இது அமலாக்கத் துறை சம்மன் அல்ல. பாஜக சம்மன். 2024 முடியும் வரை இது தொடரும். இதனால் நாங்கள் பயப்படபோவதில்லை” என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதலளிக்கும் விதமாக பாஜக மாநில தலைவரும், நேற்று துணை முதல்வராக பதவி ஏற்றவருமான சம்ருத் சவுத்ரி கூறுகையில், “லாலு குடும்பத்தினர் ஊழல்வாதிகள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ஊழல் என்பது அவர்களுக்கு மாணிக்கம் போன்றது.

ஒன்றரை ஆண்டுக்குள் கோடீஸ்வரர் ஆவது எப்படி என தேஜஸ்வி யாதவ் இளைஞர்களுக்கு சொல்லித் தர வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.

ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் குமார் 9ஆவது முறையாக நேற்று பதவி ஏற்ற, நிலையில் இன்று லாலு அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“ஐஸ்வர்யா அப்படி சொல்லல” : ரஜினிகாந்த் விளக்கம்!

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *