This is BJP's farewell budget

’இது பாஜகவின் பிரியாவிடை பட்ஜெட்’ : தலைவர்கள் கருத்து!

அரசியல் இந்தியா

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

எனினும் நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

எனினும் இன்று தாக்கல் செய்த அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் : 

“இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகாலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சலுகைகளைப் பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெட்ரோல், டீசல், சிலிண்டர் ஆகியவற்றின் விலைக்குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே பரிசளித்துள்ளது.

பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே… என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா?

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் புதிய திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாடு அண்மையில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க இதுவரை எந்தவொரு நிதியும் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களையே ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவதாகும்.

மெட்ரோ ரயில் மற்றும் வந்தே பாரத் திட்டங்கள் நாட்டின் மிக முக்கியமான நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் கடந்த மூன்றாண்டுகாலமாக சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதியை மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம்.

இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ‘ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள்’ ஆகிய நான்கு பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றுகூறி, இந்த நான்கு பிரிவினர்களையும் நான்கு சாதிகளைச் சேர்ந்தவர்கள் (“four major castes”) என்று குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஒருநாட்டின் நிதிநிலை அறிக்கையில் மிகவும் கண்டிக்கத்தக்க பிற்போக்குத்தனமான வருணாசிரம கருத்தைப் புகுத்துவது சமூகநீதிக்குப் புறம்பானது.

அனைத்துச் சமூக மக்களுக்குமான உரிமையைச் சரிசம விகிதத்தில் ‘பறிப்பதுதான்’ பா.ஜ.க பின்பற்றும் சமூகநீதி ஆகும். சமூகநீதி என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றத்தை பா.ஜ.க அடைந்திருப்பதைப் பார்த்துச் சிரிப்பு வருகிறது.

தமிழ்நாட்டு மக்கள் நலனை முழுமையாகப் புறக்கணித்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லாமல் ஒரு நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து அளித்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.  இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி.மு.க எம்.பி.,கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு முன்னால் கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே :

இந்த இடைக்கால பட்ஜெட்டில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் துன்பத்தை குறைக்க சில புதிய திட்டங்களை நாங்கள் எதிர்பார்த்தோம்.

பாஜக அரசின் சாதனை குறித்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ள இந்தச் சூழலில், மோடி அரசிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கிறோம்.

1. கடந்த 10 ஆண்டுகளில் அரசு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?

2. 2014ல் 4.6% ஆக இருந்த விவசாய வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 1.8% ஆக சரிந்தது எப்படி?  இந்தியாவில் தினமும் 31 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவது ஏன்?

3. 2014 ஆம் ஆண்டு மொத்த பட்ஜெட்டில் 4.55% ஆக இருந்த கல்விக்கான செலவு 3.2% ஆக சரிந்தது எப்படி?

4. மொத்த பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது SC, ST, OBC & சிறுபான்மையினர் நலன்களின் பங்கு ஏன் தொடர்ந்து குறைந்து வருகிறது?

5. பாதுகாப்புச் செலவு மற்றும் சுகாதாரச் செலவு ஏன் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது?

6. 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 20-24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 45.5% என்ற உச்சத்தை எட்டியது ஏன்?

7. அத்தியாவசியப் பொருட்களுக்கு 5% முதல் 18% வரை ஜிஎஸ்டி ஏன் விதிக்கப்படுகிறது? மாவு, பருப்பு, அரிசி, பால் மற்றும் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஏன்?

8. சாமானியர்களின் வருமானம் அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியது பொய். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கிராமப்புறங்களில் ஊதியம் குறைந்துள்ளது என்பதே உண்மை.

9. இடைக்கால பட்ஜெட் உரையில் எங்குமே நூறு நாள் வேலைத்திட்டத்தை பற்றி குறிப்பிடவில்லை ஏன்?. ஏனெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 100 நாட்கள் வேலை கிடைத்து வந்த நிலையில், தற்போது அது ஆண்டுக்கு 48 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

10. 2005ல் 30% ஆக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு இப்போது 24% ஆகக் குறைந்துள்ளது ஏன்?

11. காங்கிரஸ்-யுபிஏ காலத்தில் புதிய தொடரின்படி 8% ஆக இருந்த நாட்டின் சராசரி GDP வளர்ச்சி விகிதம் மோடி அரசாங்கத்தின் கீழ் வெறும் 5.6% ஆக ஏன் சரிந்தது?

சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் :

எந்த பட்ஜெட்டும் வளர்ச்சிக்காக இல்லை, எந்த வளர்ச்சியும் மக்களுக்காக இல்லை என்றால் அது பயனற்றது.

பா.ஜ.க அரசு பத்தாண்டு கால மக்கள் விரோத பட்ஜெட்டுகளுடன் வெட்கக்கேடான சாதனையை படைத்துள்ளது, இது இனி ஒருபோதும் உடைக்கப்படாது, ஏனென்றால் இப்போது ஒரு நேர்மறையான அரசாங்கம் வருவதற்கான நேரம் இது.

இது பாஜகவின் ‘பிரியாவிடை பட்ஜெட்’.

This is BJP's farewell budget

தேசியவாத காங்கிரஸ் கட்சி :

வேலையில்லாத் திண்டாட்டம் இந்த நாடு எதிர்கொள்ளும் மிகக் கொடிய பிரச்சனை என்பதை இந்த அரசாங்கம் எப்போது உணரும்? அது குற்றங்கள், அதிகரித்துவரும் சமூக உறுதியற்ற தன்மை, சீரழிந்த பொருளாதார நிலைமைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

அந்த இளைஞனுக்கு வேலை இல்லை என்றால் கலவரம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

This is BJP's farewell budget

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் :

குடியரசுத் தலைவர் உரையிலும் பட்ஜெட் உரையிலுமாக கடந்த 3 நாட்களாக மத்திய அரசு தெரிவித்த சாதனைகளை எல்லாம் பொருளாதார நிபுணர்கள் நிராகரித்துள்ளனர்.

வருமான வரி செலுத்துவோர் பழைய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமா புதிய திட்டத்தை தேர்வு செய்ய வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும். ஏன் அனைவரும் புதிய வருமான வரி திட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்று மத்திய அரசு நிர்பந்திக்கிறது?

பாஜக ஆட்சியில் கூட்டாட்சி நடைமுறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. பணம் படைத்தவர்களுக்கான அரசாக மட்டுமே பாஜக அரசு செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக கிடைக்கிறது.

கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் 32,771 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அது குறித்து நிர்மலா சீதாராமன் எதுவும் தெரிவிக்கவில்லை, இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறித்து பேசும் பிரதமர் வேலை வாய்ப்பு குறித்து பேசவில்லை.

This is BJP's farewell budget

டெல்லி கல்வித்துறை அமைச்சர்  அதிஷி மர்லினா (ஆம் ஆத்மி) :

இது ஒரு ‘ஜூம்லா’ அரசு என்பதை பட்ஜெட் நிரூபிக்கிறது. பிரதமர் மோடி 2014-ல் ஆண்டுக்கு 2 கோடி வேலை வழங்குவதாக கூறியிருந்தார். ஆனால் 10 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை.

இன்று 55 லட்சம் வேலை வாய்ப்பு தருவதாக புதிய ‘ஜூம்லா’ கொடுத்துள்ளார். பணவீக்கத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசு எப்போதும் டெல்லியை மாற்றாந்தாய் போல் நடத்துகிறது.

டெல்லி மக்கள் செலுத்தும் வரி தொகையை கருத்தில் கொண்டு டெல்லிக்கு மத்திய அரசு ரூ.15,000 கோடி கொடுத்திருக்க வேண்டும்.

மையம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பணத்தை வழங்கியுள்ளது, ஆனால் டெல்லி மாநகராட்சிக்கு இதுவரை 1 ரூபாய் கூட வழங்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : நீதிமன்றம் பாராட்டு!

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவை நோக்கி பாமக… பொதுக்குழு கொடுத்த சிக்னல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *