அமித்ஷா சொன்னது என்ன?- அண்ணாமலை விளக்கம்!
மாநில மொழியே பிரதான மொழியாக இருக்கவேண்டும் என்பதே அமித்ஷாவின் எண்ணம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவம்பர் 12) இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்து தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்குச் சென்றார்.
அங்கே சுமார் ஒன்றரை மணி நேரம் மாநில பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபிறகு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து, சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் அண்ணாமலை.
“நேற்று(நவம்பர் 11) பாரத பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் வந்திருந்தார். கிட்டத்தட்ட அரைநாள் அவர் அங்கிருந்தார். அதேபோன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிலிருந்து இன்று வரை சென்னையில் இருந்துள்ளார்.
கமலாலயம் வந்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்துப் பேசிவிட்டு டெல்லிக்கு புறப்பட்டிருக்கிறார்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும் 2 நாட்கள் இங்கு வந்து எங்களுக்கு ஊக்கத்தை கொடுத்திருக்கின்றனர். தமிழ் மக்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை பாஜக மறக்காது.
கொட்டுகின்ற மழையிலும் பெண்கள், கைக்குழந்தைகளுடன் பிரதமரை வரவேற்க காத்திருந்தார்கள். நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
தமிழ்நாடு மீதும் தமிழ் மக்கள் மீதும் பிரதமர் நம்பிக்கை வைத்திருக்கிறார். குறிப்பாக நவம்பர் 16 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கத்தை பற்றி மோடி பேசினார்.
2400 பேர் 12 ரயில்களில் வேறு வேறு குழுக்களாக காசிக்கு செல்கின்றனர். இதில் முதல் குழு வாரணாசி வரும்போது வரவேற்க இருப்பேன் என்று பிரதமர் சொன்னது மகிழ்ச்சியானது.
தமிழகத்தின் கலாச்சாரம், பாரம்பரியத்தை எடுத்துச் சொல்ல நானும் வருவேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதேபோன்று அமித்ஷாவும், உலகத்தின் தொன்மையான மொழியான தமிழை பெருமையை பறைசாற்றுவது இந்தியர்களின் கடமை என்று சொல்லியிருக்கிறார்.
அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று, மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளை தமிழ் வழியில் பயிற்றுவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“தமிழ்வழியில் படித்தவர்கள் உயர்கல்வியை முழுமையாக புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
2010 ஆம் ஆண்டு முதலே பொறியியல் படிப்புகளை தமிழில் படிப்பதற்கான வசதிகள் இருந்துவந்தும் கூட, 50 மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பொறியியல் படித்து வருகிறார்கள்.
தாய்மொழியைத்தான் பிரதான மொழியாக வைக்கவேண்டும்” என்று அமித்ஷா அறிவுறுத்தியிருக்கிறார்.
நேற்று இந்திய அளவில் ட்விட்டரில் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இது பாஜக உண்டாக்கியது அல்ல. தமிழக மக்கள் கொடுத்த அன்பு” என்றார்.
2024 கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்றபோது ஒரு மணி நேரம் பிரதமருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும், அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று மட்டும்தான் பேசினேன். கூட்டணி பற்றியோ, தேர்தல் பற்றியோ பேசுவதற்கான நேரம் இது இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
திமுகவுக்கும், பாஜகவுக்கும் தொடர்ந்து நடந்து வரும் கருத்து மோதல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திமுகவை பொறுத்தவரை எதிர்க்கவேண்டும் என்று நினைத்துவிட்டார்கள்.
அதற்கு பாஜகவும் ஆக்கபூர்வமாக தயாராகி இருக்கிறது. வன்முறை என்பது தீர்வல்ல. திண்டுக்கல்லில் கூட காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்டார்கள்.
திமுக நிர்வாகிகள் காவல்துறை, அரசு அதிகாரிகள் ஏவிவிடுகிறார்கள். அரசியலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும் களத்தில் போட்டி, சண்டை இருக்கிறது. சித்தாந்த அடிப்படையில் திமுகவை எதிர்கொள்வோம் என்று பேசினார்.
கலை.ரா
கமலாலயத்தில் அமித்ஷா நடத்திய ஆலோசனை!
செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!