”பாஜகவிற்காக கூடியுள்ள கூட்டம் இந்த முறை 100 சதவீதம் வாக்குகளாக மாறும்” என்று மதுரை ரோடு ஷோவில் பங்கேற்றுள்ள அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரைக்கு வருகை தந்தார்.
தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக மாநகரின் மையப்பகுதியில் உள்ள நேதாஜி சாலைக்கு சென்றார். அங்கிருந்து தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குதூண் ஜங்சன் வரையில் நடைபெற்ற ரோட் ஷோவில் பங்கேற்றுள்ளார். அதில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் கலந்துகொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அப்போது நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சிக்கு அமித் ஷா அளித்த பேட்டியில் பேசியதாவது, “தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, திமுக என இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள். ஊழல் செய்து இரு கட்சிகளும் மாறி மாறி தமிழ்நாட்டை சீரழித்துவிட்டன.
தமிழ்நாட்டில் தற்போது பாஜகவை மக்கள் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர். பாஜகவை ஒரு வாய்ப்பாக மக்கள் பார்க்கின்றனர்.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு வந்திருப்பவர்கள் பிரதமர் மோடிக்காகவும், மாநில தலைவர் அண்ணாமலைக்காகவும் வந்துள்ளனர். இந்த கூட்டம் இந்த முறை 100 சதவீதம் வாக்குகளாக மாறும்.
ஊழலில் இருந்து விடுபட, தமிழர்களின் பெருமையை தேசிய அளவில் எடுத்துச் செல்ல பாஜக தேவை. மோடி மீண்டும் வெற்றி பெற, தமிழ்நாட்டு மக்கள் இந்த முறை தாமரை பட்டனை அழுத்த வேண்டும்” என்று அமித் ஷா கூறியுள்ளார்.
ரோடு ஷோவை தொடர்ந்து மதுரை விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். தொடர்ந்து நாளை கன்னியாகுமரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவாக அமித் ஷா வாக்கு சேகரிக்க உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளக்குறிச்சி: மலையேறும் மலையரசன்… போராடும் குமரகுரு
ஈரம் ஸ்டைலில் அடுத்த படம்..! சப்தம் டீசர் எப்படி?