குடியரசுத் தலைவர் இன்று (செப்டம்பர் 9) அளிக்கும் இரவு விருந்தில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இன்று காலை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஜி20 மாநாட்டையொட்டி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இரவு விருந்து அளிக்க உள்ளார்.
இந்த விருந்தில் பங்கேற்க அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் தேவ கவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி உள்ளிட்ட 500 தொழிலதிபர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோருக்கு விருந்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கேபினட் அந்தஸ்து இருந்தபோதிலும் இந்த விருந்தில் அவருக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே நடக்கும்!
இதற்கு ஏற்கெனவே ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், “உலகத் தலைவர்களுக்கான அரச விருந்துக்கு அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை வேறு எந்த ஜனநாயக நாட்டு அரசாங்கமும் அழைக்காததை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது.
ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும்.
இந்தியா, அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்” என்று ப.சிதம்பரம் கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் குடியரசுத் தலைவர் விருந்தில் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ள நிலையில், ’இந்தியா’ கூட்டணியில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் நிதிஷ் குமார் (பிகார்), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட்), மம்தா பானர்ஜி (மே.வங்கம்), அர்விந்த் கேஜ்ரிவால் (டெல்லி) மற்றும் பகவந்த் மான் (பஞ்சாப்) ஆகியோரும் விருந்தில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
தொகுதி வாரியாக நியமனம்: விஜய் மக்கள் இயக்க மகளிரணி கூட்டத்தில் முடிவு!
ஜி20 மாநாடு: மோடி மேசையில் ‘பாரத்’